புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இடதுசாரி தீவிரவாதம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 70 சதவீத அளவுக்கு தீவிரவாதம் குறைந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
டெல்லியில் தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்டை (என்டிஆர்ஐ) மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று திறந்துவைத்தார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடதுசாரி தீவிரவாதம் தலைதூக்கி இருந்தது. பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் நாட்டில் இடதுசாரி தீவிரவாதம் பாதிக்கப்பட்டிருந்த மாவட்டங்களில் 70 சதவீத அளவுக்கு தீவிரவாதம் குறைந்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படை (சிறப்பு அதிகாரம்) சட்டம் 66 சதவீத பகுதிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தின் 60 சதவீத இடங்களில் தற்போது ஆயுத படை (சிறப்பு அதிகாரம்) சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அந்த மாநிலம் முழுவதும் இந்த சட்டம் நீக்கப்படும்.
பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் ஒரே வழி பாதுகாப்பான வடகிழக்கு இந்திய மாநிலங்கள் மற்றும் பாதுகாப்பான மத்திய இந்தியாவை ஏற்படுத்துவதே ஆகும்.
வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 8 ஆண்டுகளில் 8,700 விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த 8 ஆண்டுகளில் 1,700 சம்பவங்கள் மட்டுமே வடகிழக்கு மாநிலங்களில் நடந்துள்ளன.
87 வீரர்கள் உயிரிழப்பு
வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 304 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். ஆனால், பாஜக ஆட்சிக் காலத்தில் 87 பாதுகாப்புப் படை வீரர்கள் மட்டுமே உயிரிழந்தனர்.
நாட்டின் வளர்ச்சிக்கு திட்டக் கமிஷன் தற்போது நிதி ஆயோக், எல்ஐசி, பாரத மிகுமின் நிறுவனம் உள்ளிட்டவை உதவி வருகின்றன. அதைப் போலவே நாட்டில் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கு எதிர்காலத்தில் என்டிஆர்ஐ இன்ஸ்டிடியூட் முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.