மற்ற நோய்களைப் போல அல்லாமல் புற்றுநோய் மனித வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும். நோயின் பாதிப்பைவிட, புற்று செல்கள் பரவாமல் இருக்க எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறைகள் மிகவும் வேதனை அளிக்கக் கூடியவையாக இருக்கும். உடம்பின் பல பகுதிகளிலும் பரவும் புற்றுசெல்களை முழுமையாகத் தடுப்பதற்கான மருந்துகளும் இன்னும் சோதனையிலேயே உள்ளன. இந்நிலையில், வரலாற்றில் முதன் முறையாக புற்றுநோய்க்கான சோதனை மருந்து வெற்றி பெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ள தகவலின்படி ‘மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கீமோதெரபி, ரேடியேஷன், அறுவை சிகிச்சை என பல சிகிச்சை முறைகளை மேற்கொண்ட 18 பேர் ஒரு சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். நியூயார்க்கின் ‘மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டர்’ நடத்திய இந்த கிளினிகல் ட்ரையலில் பங்கேற்ற அனைவரும் புற்றுநோய் பாதிப்பில் ஒரே ஸ்டேஜில் இருந்தவர்கள்.
அனைவருக்கும் “டோஸ்டார்லிமாப்” (Dostarlimab) என்ற மருந்து கொடுக்கப்பட்டது. ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மூலக்கூறுகளைக் கொண்ட இம்மருந்து, உடலில் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் ஆன்டிபாடியாக செயல்படுகிறது.
தொடர்ந்து மூன்று வாரங்கள் என ஆறு மாத காலத்திற்கு தொடர்ச்சியாக இவர்கள் அனைவருக்கும் இந்த மருந்து கொடுக்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் புற்றுநோயின் அறிகுறிகளும், கட்டிகளும் மறைந்ததோடு, அனைவரும் குணமடைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
புற்றுநோய் வரலாற்றிலேயே முதல்முறையாக இது சாத்தியமாகியுள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டரை சேர்ந்த மருத்துவர் லூயிஸ் ஏ.டயஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மட்டுமல்ல, வரலாற்றில் முதன்முறையாக இதுபோன்ற நிகழ்வு நடந்துள்ளதாக மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர். இந்தச் சோதனையின் முடிவுகள் நம்பகத்தன்மையோடு இருந்தாலும், சிறிய குழுவை வைத்துச் செய்யப்பட்ட பரிசோதனை என்பதால், இன்னும் பெரிய அளவிலான சோதனை செய்து பார்க்கப்பட வேண்டும் என புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.