இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் திட்டங்களை போல் கூட்டுறவுத் துறையில் தகுதியான விவசாயிகள் வீடுகளுக்கு சென்று கடன் வழங்கவும், அந்த நடைமுறையை எளிமைப்படுத்தலாம் எனவும் முடிவு செய்திருப்பதாக தஞ்சாவூரில் நடைபெற்ற குறுவை சாகுபடி குறித்த ஆய்வு கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான ஆயத்தப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தி யாளர்களிடம் கூறியதாவது, “கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு 10,292 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 12,000 கோடி ரூபாயை தாண்டி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களுக்கு இதுவரை 1,400 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு 2,800 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ளோம். காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அதிகப்படியாக கடன் வழங்கப்படும்.
கூட்டுறவு சங்கங்களில் கடந்தாண்டு புதிய உறுப்பினர்கள் அதிளவில் சேர்க்கப்பட்டு, அதிக கடன் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. உரிய காலத்தில் கடன் தொகையை கட்டினால் வட்டி இல்லை என்பதால் விவசாயிகள் கடன் தொகையையும் திருப்பி செலுத்தி வருகின்றனர். இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் திட்டங்களை போன்று, கூட்டுறவுத் துறையில் தகுதியான விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று கடன் வழங்கவும், அந்த நடைமுறையை எளிமைப்படுத்தலாம் எனவும் முடிவு செய்துள்ளோம்.
முதற்கட்டமாக, காவிரி டெல்டாவில் தஞ்சாவூர் மாவட்டத்தில், விவசாயிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கூட்டுறவு கடன் வழங்கம் திட்டம் செயல்படுத்தப்படும்.15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் கூட்டுறவு சங்க செயலாளர்கள் மீது பல்வேறு புகார்கள் வருகின்றன. அந்த செயலாளர்களை பணியிடமாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.