மதுரை ஆதீனம் Vs அரசியல் கட்சிகள்… நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மோதல் – ஒரு பார்வை!

“ஆதீனங்கள் அரசியல் பேசலாமா எனக் கேட்கிறார்கள்…நாங்க பேசாமல் வேறு யார் பேசுவது?

ஆதீனங்கள் அரசியல் பேசக்கூடாது என்றால் அரசியல்வாதிகளுக்கு கோவில்களில் என்ன வேலை?

என் உயிருக்கு ஒரு அச்சுறுத்தல் என்றால் பாரதப் பிரதமர் மோடியையும் அமித் ஷாவையும் சென்று சந்திப்பேன்.

அறநிலையத்துறையைக் கலைத்துவிடவேண்டும். கோவில் நிர்வாகத்தை ஓய்வுபெற்ற நீதிபதிகளிடம் ஒப்படைக்கவேண்டும்.

நடிகர் விஜய் படத்தைப் பார்க்காதீங்க”

இப்படி பல அதிரடியான கருத்துகளைப்பேசி எப்போதும் லைம்லைட்டிலேயே இருந்து வருகிறார் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள். சமீபத்தில் மதுரையில் நடந்த துறவிகள் மாநாட்டில் அவர் பேசிய பேச்சுகள் சர்ச்சையாகி அவருக்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

கே.பாலகிருஷ்ணன்

“மதுரையில் துறவிகள் மாநாடு என்ற பெயரில் ஆன்மிகவாதிகள் பேசிய பேச்சுகள் ஏற்க முடியாதவை. மதுரை ஆதீனம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை தரம் தாழ்ந்து விமர்சித்திருக்கிறார். முஸ்லிம்கள் தேச விரோதிகள், கம்யூனிஸ்டுகள் தேச அக்கறை இல்லாதவர்கள் என்றும் பேசியிருக்கிறார். இதைப்பேச என்ன உரிமை உள்ளது?

ஆதீனம் அரசியல் பேசலாம். ஆனால், இஸ்லாமியர்களை தேச விரோதிகள் எனப் பேசுவது என்ன விதமான அரிசியல்?.., மோடிக்கு வக்காலத்து வாங்கும் வகையில் ஆதீனம் பேசுவதன்மூலம், ஆன்மிகப் பணியிலிருந்து ஆர்.எஸ்.எஸ் பணிக்கு மாறிவிட்டீர்கள் என்பதைத்தான் காட்டுகிறது. ஆதீனம் என்கிற பெயரில் மதவெறி கூடாரமாக மடங்கள் மாறிவிடக் கூடாது. அறநிலையத்துறை சொத்துகளை எல்லாம் ஒப்படைக்குமாறு கேட்கிறார்கள். ஆதீன மடங்கள் என்ன மாதிரி அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள்?

தி.மு.க அரசு பல கோயில் சொத்துகளை மீட்டிருக்கிறது. ஆதீன மட சொத்துகளின் கணக்கை எடுத்து விவாதிக்கத் தயாரா?..,கோயில்கள் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, அங்கு பல பொக்கிஷங்கள் இருக்கின்றன. அதை அரசுதான் பாதுகாக்க வேண்டும். ஆதீனப் பராமரிப்பில் இருந்த சொத்துகளில் முறைகேடுகள் நடந்த காரணத்தால்தான் அறநிலையத் துறையே உருவாக்கப்பட்டது” என மிகக் காட்டமான கருத்துகளைத் தெரிவித்திருந்தார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

அமைச்சர் சேகர்பாபு

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, “ஆதீனங்களின் ஆன்மிகம் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துக்கு எதிரானது. ஆர்.எஸ்.எஸ்ஸின் ஊதுகுழலாக ஒலிக்கும் தற்போதைய மதுரை ஆதீனம் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். தமிழகத்தின் தொன்மையான ஆதீன மரபுக்குக் களங்கம் விளைவிப்பவர்கள். இவர்களிடம் தமிழகம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். ஆதீனப்போர்வையில் ஒளிந்துகொண்டு, ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.க-வின் குரலாக, அமைதி, நல்லிணக்கத்தின் அடையாளமான தமிழக மண்ணில், பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தமிழக அரசு உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார் .

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும். தன்னைப் பற்றி தொடர்ந்து செய்திகள் வரவேண்டும் என்பதற்காகவே மதுரை ஆதீனம் இப்படி பேசி வருகிறார். அவர் மட்டும்தான் இப்படி பேசிவருகிறார். அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. காலப்போக்கில் அவரும் மனம்மாறி இந்த அரசை ஆதரிக்கின்ற, அரசியல்வாதிகளை ஏற்றுக்கொள்கிற நிலைக்கு வருவார்” என கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

இந்தநிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கனகராஜிடம் இதுகுறித்துப் பேசினோம்.

“ஆதீனம் அரசியல் பேசுவது தவறில்லை. ஆனால், அவர் பேசிய இடம்தான் சிக்கலானது. வி.ஹெச்.பி ஒருங்கிணைத்த கூட்டத்தில்தான் சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். சங்பரிவார் அமைப்புகளுக்கும் ஆன்மிகத்துக்கும், இந்து மதத்துக்கும் எந்த சம்மந்தமுமில்லை. அடிப்படையில் சாவர்க்கர் ஒரு நாத்திகர். ஒரு நாத்திகர் எப்படி மதம் சார்ந்த விஷயங்களுக்காக ஒரு அமைப்பை ஆரம்பிப்பார். இந்து மதம் என்பது வேறு, இந்துத்துவா என்பது வேறு என தன்னுடைய புத்தகத்திலேயே சாவர்க்கர் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தவகையில் இவர்களின் செயல்பாடுகள் முழுக்க முழுக்க அரசியல் அணிதிரட்டலுக்கானது மட்டுமே. ஆதீனம் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கி இப்படிப் பேசினால் எந்தப் பிரச்னையுமில்லை. ஆனால், ஆன்மிகத்தை ஒரு கவசமாக வைத்துக்கொண்டு, பிற்போக்கு அரசியலைத் தூக்கிப் பிடிக்க முடிவெடுத்தால், அது நிச்சயமாக விமர்சனத்துக்குள்ளாகத்தான் செய்யும்.

கனகராஜ்

ஆசாரம் பாபுவில் தொடங்கி நித்தியானந்தா வரைக்கும் ஆன்மிகம் எனத் தொடங்கி கடைசியில் எங்கே போய் நின்றார்கள் என்பது அனைவரைக்கும் தெரியும். ஆன்மிக நிறுவனங்கள், கார்ப்பரேட் மயமாவதும் மதவெறி மயமாவதும் அரசியலுக்கு கேடு என்பதைவிட ஆன்மிகத்துக்குத்தான் கேடாக முடியும். அறநிலையத்துறையில் இருந்து அரசு விலகிக்கொள்ள வேண்டும் என்கிற கருத்து எந்த அடிப்படையில் வருகிறது என விளக்கவேண்டும். ஊழல் மட்டுமே காரணம் என்றால், ரஃபேல் ஊழல் குறித்தும்தானே பேசவேண்டும். நேர்மையாக நிர்வாகம் இல்லாதமத நிறுவனங்களை ஒன்றிய அரசாங்கம் அவர்களின் கையில் இருக்கின்ற வருமான வரித்துறை உள்ளிட்ட நிறுவனங்களை வைத்து மிரட்டுகிறார்கள். அதற்கு அடிபணிந்து போவதாலேயே இது போன்ற கருத்துகளைப் பேசவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்” என்கிறார்.

இந்த விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநிலத் துணைத் தலைவர், நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்..,

“ஆன்மிகவாதிகள் அரசியல் பேசக்கூடாது என எந்தச் சட்டத்திலும் சொல்லப்படவில்லை. ஆன்மிகம் என்பதே மக்களை ஒருங்கிணைக்கக்கூடிய ஒரு சக்தி. அந்தவகையில், நாட்டு நடப்புகளை, சமுதாயத்தில் உள்ள விஷயங்களை எடுத்துக்காட்டும் பொறுப்பும் கடமையும் அக்கறையும் ஆன்மிகவாதிகளுக்கு உறுதியாக இருக்கிறது. ஆதீனம் அரசியல் பேசக்கூடாது என்பது அவர்களின் உரிமையில் தலையிடும் சர்வாதிகாரமாகவே நான் கருதுகிறேன். எந்த ஒரு இடத்திலும் குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஆதரித்து ஆதீனம் உள்ளிட்ட ஆன்மிகவாதிகள் பேசியதாகத் தெரியவில்லை. அப்படிப் பேசினாலும் அது வரவேற்கத்தக்கதுதான்.

நாராயணன் திருப்பதி

ஆன்மிகவாதி அரசியல் பேசக்கூடாது என்று சொன்னால், மதச்சார்பற்ற கட்சிகள், மதச்சார்பற்ற அரசு என்று சொல்பவர்கள் ஆன்மிகம் குறித்த கருத்துகளை ஏன் சொல்ல வேண்டும்?. இந்து மதம் குறித்து தொடர்ந்து இழிவாகப் பேசும் ஒரு நிலை தமிழகத்தில் இருக்கிறது. திமுக, அவர்களின் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து அதைச் செய்து வருகின்றன. ஆன்மிகவாதிகளை மிரட்டி வருவதை வெட்கக்கேடான ஒரு செயலாகத்தான் நான் பார்க்கிறேன். அவர்களின் சொத்துக்களுக்கு அச்சுறுத்தல் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இருந்துதான் வரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு ரகசியம். மடங்களின் சொத்துக்களை பலகாலம் மிரட்டி, ஆக்கிரமித்திருந்தனர். புதிதாகப் பொறுப்பேற்றிருக்கூடிய ஆதீனம் அதுகுறித்துப் வெளிப்படையாகப் பேசுவது ஜனநாகயத்துக்கு நல்லது. உறுதியாக, நில ஆக்கிரமிப்பாளர்களை ஓடஓட விரட்டுவதற்கான வழியை அது செய்யும். பாஜக அதற்கு துணை நிற்கும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.