புதுடெல்லி: மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 12 நோயாளிகளின் கட்டிகள் ஆறு மாதம் டோஸ்டார்லிமாப் என்ற புதிய மருந்து எடுத்து கொண்டதில் கரைந்து, அவை இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று அமெரிக்க மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகில் புதிய மைல்கல்லாகும்.நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:மிஸ்மேட்ச் ரிப்பேர் (எம்எம்ஆர்) குறைபாடுள்ள செல்கள் பொதுவாக புற்றுநோய்க்கு வழிவகுக்கும் பல டிஎன்ஏ மரபணு மாற்றங்களை கொண்டுள்ளன. இந்த குறைபாடு பெருங்குடல் புற்றுநோய், பிற வகை இரைப்பை குடல் புற்றுநோய் மற்றும் கர்ப்ப பை புற்றுநோய் ஆகியவற்றில் மிகவும் பொதுவாக காணப்படும்.நியூயார்க்கில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் அறக்கட்டளை புற்றுநோய் மையத்தில் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2வது மற்றும் 3வது நிலையில் புற்றுநோய் கட்டிகள் இருந்த 12 நோயாளிகளுக்கு 6 மாதங்களுக்கு ஒவ்வொரு 3 வாரங்களுக்கும் தொடர்ந்து மருந்து வழங்கப்பட்டது.இந்த கட்டிகளுக்கு டோஸ்டார்லிமாப் என்ற புதிய மருந்து, எதிர்ப்பு மருந்து, தொடர் கீமோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை ஆகிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த நோயாளிகளுக்கு மேலும் சில தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சை முறைகள், பரிசோதனைகள் நடத்தப்பட்டது. ஆறு மாத முடிவில், சிகிச்சையில் இருந்த 12 நோயாளிகளின் உடல், எண்டோஸ்கோபி, பயாஸ்கோபி, பிஇடி ஸ்கேன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறிக்கைகள் எதிலும் அவர்களுக்கு இருந்த புற்றுநோய் கட்டி தென்படவில்லை.இது தவிர, காந்த அதிர்வு இமேஜிங்கில் கூட கட்டி இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.நோயாளிகளின் கட்டிகள் முற்றிலும் மறைந்துவிட்டன என்பதை விட, கூடுதல் தகவல்களாக அவர்களில் யாரும் கடுமையான பக்க விளைவுகள் எதுவும் இருப்பதாக தெரிவிக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.இதற்கு முன்பு, பெம்ப்ரோலிசுமாப் மருந்தை சோதனை அடிப்படையில் பயன்படுத்தி இதே போன்ற நடத்தப்பட்ட மற்றொரு சர்வதேச ஆய்வில், இந்த ஆய்வில் போன்று 100 சதவீத குணம் கிடைக்கவில்லை. மாறாக, 70 சதவீத நோயாளிகள் மட்டுமே அதுவும் 3 ஆண்டுகள் தொடர் சிகிச்சையில் குணமடைந்திருந்தனர்.இவ்வாறு அந்த ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.இந்தியாவில் இதுவரை இதுபோன்ற சோதனைகள் எதுவும் இல்லை நடத்தப்படவில்லை என்ற போதிலும், இந்த சிகிச்சையானது மலக்குடல் புற்றுநோயாளிகளின் வலிக்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.ஒரு டோஸ் ரூ2 லட்சம் தற்போதைய ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ள டோஸ்டார்லிமாப் மருந்து இந்தியாவில் இன்னும் கிடைப்பதில்லை. ஒருவேளை கிடைக்கும் பட்சத்தில் ஒரு டோஸ் விலை ரூ2 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.