நியூயார்க்,:மருத்துவ வரலாற்றில் முதன் முறையாக மலக்குடல் புற்றுநோயை மருந்து வாயிலாக அமெரிக்க மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்கிலிருக்கும் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மையத்தில் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு சோதனை முயற்சியாக ‘டோஸ்டர்லிமாப்’ என்ற மருந்து தரப்பட்டது. ரத்தத்தில் நோய் எதிர்ப்பு வெள்ளை அணுக்களை உருவாக்கும் இந்த மருந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் மூன்று வாரங்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில் ஆறு மாதங்கள் சாப்பிட்டு வந்தனர்.
அதன்பின் அவர்களை பரிசோதித்ததில் மலக்குடல் புற்றுநோய் கட்டி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது தெரியவந்தது.இது குறித்து இந்த பரிசோதனையை மேற் கொண்ட டாக்டர் ஏ.டையஸ் பெருங்குடல் மலக்குடல் நோய் நிபுணர் டாக்டர் ஆலன் வெனுக் ஆகியோர் கூறியதாவது:மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 பேரும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டத்தில் இருந்தனர். அவர்களுக்கு புற்றுநோய் கட்டி உடலின் இதர பாகங்களுக்கு பரவாமல் மலக்குடல் பகுதியில் மட்டும் இருந்தது. அதனால் சோதனை முயற்சியாக டோஸ்டர்லிமாப் மருந்து கொடுத்தோம். இந்த மருந்தால் நோயாளிகளுக்கு எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை.
அதேசமயம் ஆச்சரியப்படும் வகையில் அவர்கள் அனைவருக்கும் மலக்குடல் புற்றுநோய் கட்டி அடியோடு மறைந்து விட்டது. மருத்துவ வரலாற்றில் முதன் முறையாக இத்தகைய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. எனினும் தொடர்ந்து பரிசோதனைகள் நடத்திய பின்னரே அதிகாரப்பூர்வ மருத்துவ நடைமுறையை அமல்படுத்த முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
எப்படி வருகிறது
பெருங்குடலின் இறுதியில் உள்ள மலக்குடலில் செல்களின் அசாதாரண வளர்ச்சியால் உருவாகும் திசுக்கட்டி மலக்குடல் புற்றுநோய் எனப்படுகிறது. 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் நீரிழிவு நோயாளிகள் அதிகமானோர் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புகை, மது பழக்கம், மலச்சிக்கல், அதிக எடை, உடல் உழைப்பற்ற பணி போன்றவற்றுடன் மரபணு ரீதியிலும் இந்நோய் வர வாய்ப்புள்ளது. அதிக சோர்வு திடீர் எடை குறைவு மலத்தில் ரத்தக் கசிவு கரு நிறத்தில் மலம் போன்றவை இந்நோயின் அறிகுறிகள்.
Advertisement