ஜெய்பூர்: ராஜஸ்தானில் 4 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 10ம் தேதி நடக்க உள்ளது. இதில் 108 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ் 2 இடங்களிலும், பாஜ ஒரு இடத்திலும் வெல்வது உறுதியாகி உள்ளது. 4வது இடத்தை கைப்பற்றி காங்கிரஸ் தீவிரமாக முயற்சி செய்கிறது. இதற்கு பிற கட்சிகள், சுயேச்சைகளின் ஆதரவு தேவை. இதனால், குதிரை பேரத்தை தவிர்க்க, காங்கிரஸ், பாஜ இரு கட்சிகளும் தங்களின் எம்எல்ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளன. இதற்கிடையே, பாஜ ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிடும் பிரபல ஊடக நிறுவன உரிமையாளர் சுபாஷ் சந்திரா நேற்று அளித்த பேட்டியில், ‘‘காங்கிரசின் 4 ஓட்டுகள் எனக்கு மாறி விழுவது நிச்சயம். 8 ஓட்டுகள் எனக்கு ஆதரவாக மாறி விழும். அதற்கான பேச்சுவார்த்தை ரகசியமாக நடக்கிறது. எம்பி தேர்தலில் நான் வெல்வேன்’’ என கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கருத்து நகைப்புக்குரியது என காங்கிரசின் சச்சின் பைலட் மறுத்துள்ளார்.