டெல்லி: முப்படை தலைமை தளபதி நியமன விதிகளில் ஒன்றிய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. ராணுவப்படை, விமானப்படை, கடற்படை ஆகியவற்றிக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், வளங்களை முறையாக பயன்படுத்தும் வழிமுறைகளை வகுக்கவும் முப்படை தலைமை தளபதி பதவியை ஒன்றிய அரசு உருவாக்கியது. நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அதன்பிறகு, முப்படை தலைமை தளபதி காலியாக இருந்தது. இந்நிலையில் முப்படை தலைமை தளபதி பதவிக்கான நியமன விதிகளில் ஒன்றிய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி, லெப்டினென்ட் ஜெனரல், ஏர் மார்ஷல், வைஸ் அட்மிரல் ஆகியோர் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட தகுதி வாய்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. முப்படை தலைமை தளபதியாக நியமனம் செய்யப்படும் நபரின் வயது 62-க்கு குறைவாக இருக்கவேண்டும் எனவும், அவ்வாறு நியமிக்கப்படும் நபரின் பதவிகாலம் 3 ஆண்டுகளாக உள்ள நிலையில், தேவைப்பட்டால் பதவிக்காலத்தை 65 வயது வரை ஒன்றிய அரசு நீட்டிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.