சென்னை: மனநல பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்த பிறகும், கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் இருப்பதை தடுப்பது குறித்து தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்திற்கு அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெபமணி ஜனதா கட்சியின் பொதுச் செயலாளரான ஜெ. மோகன்ராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் வருந்தத்தக்க நிலை குறித்து சமூக ஊடகங்களில் வெளியான செய்தியில், காமராஜரிடம் நெருங்கி பழகியவரும், முன்னாள் அமைச்சருமான கக்கனின் மகன் நடராஜமூர்த்தி சங்கிலியால் பிணைக்கப்பட்டு நகர முடியாத நிலையில் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் இருப்பதாகவும், இங்கு 3000 நோயாளிகள் உள்ள நிலையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட நபர்கள் முழுமையாக குணமடைந்தாலும் இன்னும் மருத்துவமனையில் இருந்து வாடுகின்றனர்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனு அளித்தேன்.
அந்த மனுவுக்கு தற்போது வரை எந்த பதிலும் வரவில்லை. எனவே, நான் கொடுத்த மனு மீது தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமூக வலைதள தகவல்களில் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராயாமல், எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
அதேசமயம், முறையான ஆதாரங்களை திரட்டி புதிதாக வழக்கு தொடர மனுதாரருக்கு அனுமதியளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.