சண்டிகர்: பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கு தொடர்பாக 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிரபல பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் இளம் தலைவருமான சித்து மூஸ் வாலா கடந்த மே 29–ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்தது மற்றும் வேவு பார்த்தது தொடர்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவை சேர்ந்த 8 பேரை பஞ்சாப் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் கொலையாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 4 பேர் மற்றும் பிற குற்றவாளிகளை பிடிக்க போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் மன்சா மாவட்டத்தில் உள்ள மூஸா கிராமத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று சென்றார். பாடகர் மூஸ் வாலாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அம்ரிந்தர் சிங் ராஜா வாரிங், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா, முன்னாள் துணை முதல்வர் ஓ.பி. சோனி உள்ளிட்டோர் உடன் சென்றனர். ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு மூஸா கிராமத்திலும் பாடகர் மூஸ் வாலா வீட்டுக்கு வெளியேயும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.