நடிகர் சல்மான் கானின் தந்தை சலீம் கான் இரண்டு நாள்களுக்கு முன்பு மும்பை பாந்த்ரா கடற்கரையில் நடைபயிற்சி சென்ற போது கொலை மிரட்டல் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலாவுக்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. சல்மான் கானுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலாகவே இதனை போலீஸார் கருதினர்.
இதையடுத்து சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சல்மான்கானும் போலீஸாரிடம் நேரில் புகார் கொடுத்துள்ளார். அப்போது, போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், தனக்கு கொலை மிரட்டல் வரவில்லை என்றும் தனது தந்தைக்குத்தான் வந்தது என்றும் தெரிவித்துள்ளார். “சமீப காலமாக தனக்கு யாருடனும் விரோதம் கிடையாது. எனவே யார் மீதும் சந்தேகப்படுவதற்கு உறுதியான காரணம் இல்லை. சமீபத்தில் யாருடனும் கருத்து வேறுபாடும் ஏற்பட்டதில்லை. எனக்கு மிரட்டல் போன் அல்லது மெசேஜ் வரவில்லை. பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா படுகொலைக்கு பொறுப்பு ஏற்ற கோல்டி பிரர் பற்றி எனக்கு தெரியாது.
ஆனால் லாரன்ஸ் பிஷ்னோய் பற்றி எனக்கு தெரியும்” என்று சல்மான்கான் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். சல்மான் கான் தந்தைக்கு வந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயிடம் சல்மான் கானுக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் குறித்து விசாரிக்கப்பட்டது. லாரன்ஸ் பிஷ்னோயும் இந்த மிரட்டல் விவகாரத்தில் தனக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் 2018-ம் ஆண்டு ராஜஸ்தான் கோர்ட்டில் லாரன்ஸ் பிஷ்னோய் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடதக்கது. அதோடு அவனது ஆள்கள் மும்பை வந்து இதற்காக வேவு பார்த்துவிட்டு சென்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.