ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணி 647 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' – சுவேத் பார்கர் இரட்டை சதம் அடித்தார்

பெங்களூரு,

87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4 கால்இறுதி ஆட்டங்கள் (5 நாள் ஆட்டம்) பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புறபகுதியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் மும்பை அணி, உத்தரகாண்டை சந்தித்தது.

முதலில் பேட் செய்த மும்பை அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்திருந்தது. அறிமுக வீரராக களம் கண்ட சுவேத் பார்கர் 104 ரன்களுடனும், சர்ப்ராஸ் கான் 69 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

2-வது நாளான நேற்று தொடர்ந்து அதிரடியாக ஆடிய சர்ப்ராஸ்கான் 153 ரன்னில் (205 பந்து, 14 பவுண்டரி, 4 சிக்சர்) மயங்க் மிஸ்ரா பந்து வீச்சில் போல்டு ஆனார். அவர் ரஞ்சி போட்டியில் தனது கடைசி 13 இன்னிங்சில் 6 முறை 150 ரன்களுக்கு மேல் திரட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நிலைத்து நின்று மிரட்டிய சுவேத் பார்கர் 252 ரன்னில் (447 பந்து, 21 பவுண்டரி, 4 சிக்சர்) ரன்-அவுட் ஆனார். இதன் மூலம் சுவேத் ஒட்டுமொத்த முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக வீரராக கால்பதித்து அதிக ரன் எடுத்த 5-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

மும்பை அணி முதல் இன்னிங்சில் 166.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 647 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய உத்தரகாண்ட் அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 2 விக்கெட்டுக்கு 39 ரன்கள் எடுத்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.