ராசிமணல் பகுதியில் எந்த ஒரு திட்டத்தையும் முன்னெடுக்கும் யோசனை இல்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
காவிரியின் குறுக்கே ராசிமணல் பகுதியில் புதிய அணை அமைக்க கோரி யானை ராஜேந்திரன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனு மீது பதிலளிக்க தமிழக அரசு, கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது. இதில் மனுதாரரான யானை ராஜேந்திரனுக்கு தமிழக அரசு தரப்பிலிருந்து தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர், `ராசிமணல் பகுதியில் அணை அமைப்பது உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் முன்னெடுப்பதற்கான திட்டவரைவு தயாரிப்பு உள்ளிட்ட எந்த ஒரு யோசனையும் இல்லை’ என குறிப்பிட்டுள்ளார். மேலும் சிவசமுத்திரம், மேகதாது, ராசிமணல், ஒகேனக்கல் ஆகிய நான்கு இடங்களில் நீர்மின் நிலையம் அமைக்க தேசிய ஹைட்ரோ பவர் கார்பரேசன் திட்ட அறிக்கை தயாரித்திருந்தபோதும், கர்நாடக அரசு ஒத்துழைப்பு வழங்காததால் இந்தத் திட்டங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க… காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து கேஎல் ராகுல் விலகல்! அடுத்த கேப்டன் யார்?
ஏற்கனவே தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே மேகதாது அணை பகுதியில் அணை அமைக்கும் கர்நாடக அரசின் முடிவிற்கு அனுமதி வழங்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியிருந்த நிலையில், காவேரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க தடை விதிக்க கோரி தமிழக அரசு புதிதாக நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM