இலங்கையில் ராவணனைக் கொன்று சீதையை மீட்டு வந்த ராமர், வழியில் வனத்தில் தங்கியபோது, ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவனை வழிபட வேண்டும் என்று முனிவர்கள் கூறினர். சிவ பூஜைக்குரிய லிங்கத்தைக் கொண்டு வர அனுமனிடம் கேட்டுக்கொண்ட ராமர், கடலில் தோஷம் நீங்க நீராடி முடித்தார். சிவலிங்கம் கொண்டு வரச்சென்ற அனுமன் நீண்ட நேரமாகியும் திரும்பாததால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வழிபட வேண்டும் என்பதால் கடற்கரை மணலில் சீதையால் பிடிக்கப்பட்ட மணல் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
தாமதமாக வந்த அனுமன், சிவலிங்க பூஜை முடிந்ததைக் கண்டு கோபமடைந்தார். அனுமனை சமாதானம் செய்த ராமர், அனுமன் கொண்டு வந்த லிங்கத்தை முதலில் வணங்கிய பின், தன்னால் பூஜிக்கப்பட்ட லிங்கத்தை வழிபட வேண்டும் எனக் கூறினார். ராமபிரானால் பூஜிக்கப்பட்ட இந்த லிங்கமே ராமநாத சுவாமியாகவும், ராமர் ஈஸ்வரனை வணங்கியதாலேயே இத்தலத்திற்கு ராமேஸ்வரம் என்ற பெயர் வந்ததாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் வரலாற்றை பிரதிபலிக்கும் விழாவே ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவாக ஆண்டு தோறும் மூன்று நாள்கள் கொண்டாடப்படுகிறது.
அதன்படி இந்தாண்டு ராமலிங்க பிரதிஷ்டை விழா நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, ராமநாதசுவாமி கோயிலில் இருந்து ராமர் – லட்சுமணன், ரத வீதி வழியாக வீதி உலா வந்தனர். திட்டக்குடியில் உள்ள துர்க்கை அம்மன் கோயில் அருகே நடைபெற்ற நிகழ்வில் பத்து தலைக் கொண்ட ராவணன், ராமரை மூன்று முறை வலம் வந்த பின்பு ராமர் தன்னுடைய வேலால் ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, வதம் செய்யப்பட்ட வேலுக்கு பால் பன்னீர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகமும், வேலுக்கும் ராமர் லட்சுமணனுக்கும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. அப்போது கோயில் யானை ராமலெட்சுமி தனது தும்பிக்கையை உயர்த்தி ராமர், லட்சுமணனை வணங்கியது. அதனைத் தொடர்ந்து மீண்டும் ராம, லட்சுமணர் கோயிலுக்குள் சென்றனர்.
விழாவின் 2-ம் நாளான இன்று கோதண்டராமர் கோயிலில் விபீஷணர் பட்டாபிஷேம் நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு 4 மணிக்கு சுவாமி சந்நிதியில் ஸ்படிகலிங்க பூஜையும், பின்னர் கால பூஜைகளும் நடந்தன.
தொடர்ந்து காலை 7 மணிக்கு ஸ்ரீராமர், விபீஷணர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் கோதண்டராமர் கோயிலுக்கு எழுந்தருளல் நடந்தது. நகர முக்கிய வீதிகள் வழியாக உலா வந்த ஸ்ரீராமர், சீதா, லட்சுமணன், அனுமன் உள்ளிட்ட மூர்த்திகள் பகல் 11 மணியளவில் கோதண்டராமர் கோயிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அங்கு மதியம் 12 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் மதியம் 1 மணியளவில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டுதல் வைபவம் நடந்தது.
கோயில் குருக்கள் விபீஷணருக்கு பட்டு அங்கவஸ்திரத்தினால் பரிவட்டம் கட்டி பட்டாபிஷேக வைபவத்தை நடத்திவைத்தார். பின் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விபீஷணர் பட்டாபிஷேக நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று காலை சுவாமி புறப்பாடு நடந்தவுடன் காலை 7 மணிக்குக் கோயில் நடை சாத்தப்பட்டது.
பகல் முழுவதும் கோயில் நடை அடைக்கப்பட்டது. பக்தர்கள் தீர்த்தமாடவும் அனுமதிக்கப்படவில்லை. விபீஷணர் பட்டாபிஷேக விழா முடிந்து சுவாமி, அம்பாள் கோயிலுக்கு திரும்பியவுடன், மாலை 4 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்பட்டது. 3-ம் நாள் விழாவையொட்டி நாளை மதியம் 12 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் சுவாமி சந்நிதியில் அனுமன் லிங்கம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், ராமலிங்க பிரதிஷ்டை நிகழ்ச்சியும் நடைபெறும்.