கொச்சி: நூபுர் சர்மா அரசு அதிகாரி அல்ல என்பதால், அவரது சர்ச்சை கருத்து மத்திய அரசின் நிர்வாகத்தில், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும், வளைகுடா நாடுகளுடனான நல்லுறவு தொடரும் எனவும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பா.ஜ செய்தி தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்பினர் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வளைகுடா நாடுகள் பல, தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு கேரள மாநிலம் கொச்சியில் நேற்று பேட்டியளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:
நூபுர் சர்மா அரசு அதிகாரி அல்ல. அதனால் அவர் தெரிவித்த கருத்து மத்திய அரசின் நிர்வாகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இந்த விவகாரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. வளைகுடா நாடுகளுடனான நல்லுறவுகள் தொடரும்.
இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற சமூக ஊடக பிரச்சாரத்தை நான் கேள்விப்படவில்லை. இதுபோன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்படக் கூடாது என்றுதான் வளைகுடா நாடுகள் குறிப்பிட்டுள்ளன.
சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாட்டில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் கவலைப்பட வேண்டாம். இவ்வாறு அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.