லண்டன்: கரோனாவிற்கு பிறகு உலக அளவில் பெரும் மாற்றம் நடந்திருக்கிறது. அதுவும் குறிப்பாக தொழில் , மருத்துவ துறைகளில் நாளும் மாற்றங்கள் நடந்தேறி கொண்டு வருகின்றன.
அந்தவகையில், இங்கிலாந்தில் 4 நாட்களுக்கு மட்டும் வேலை செய்யும் சோதனை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை திட்டம் பிரிட்டன், கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் 6 மாதங்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த சோதனையை ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ச் பல்கலைகழங்கள் & பாஸ்டன் கல்லூரி போன்றவை ஒருக்கிணைத்துள்ளன.
முதற் கட்டமாக லண்டனை சேர்ந்த நிறுவனங்கள் இந்த சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளன. வங்கிகள், மருத்துவமனைகள், அனிமேஷன் ஸ்டுடியோக்கள் என உலகம் முழுவதும் சுமார் 150 நிறுவனங்களை சேர்ந்த7,000 பணியாளர்கள் இந்த சோதனையில்பங்கேற்றுள்ளனர்.
இந்த சோதனை முறையில், வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை செய்தாலும் ஊழியர்களுக்கு முழு சம்பளம் அளிக்கப்படும். குறைந்த நாட்கள் வேலை செய்வதன் மூலம் நிறுவனங்கள் தங்களது வேலைக்கான இலக்கை அடைகிறதா என்பதை உறுதிப்படுத்தவே இந்த சோதனை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த சோதனை திட்டம் குறித்து பாஸ்டன் கல்லூரி பேராசிரியர் ஜூலியட் கூறும்போது, “ வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை முறையானது நிறவனம், பணியாளர், காலநிலை என அனைத்திற்கு உதவிக்கரமாக இருக்கும்.
பணியிடங்களில், உற்பத்தித்திறன் மற்றும் வணிகத்திற்கு தீங்கு விளைவிக்காமல் இந்த சோதனையை செயல்படுத்துவதே இந்த சோதனையின் முக்கிய நோக்கம். நாம் பல நூற்றாண்டுகள் பழமையான, நேரத்தை அடிப்படையாகக் கொண்ட வேலை அமைப்பில் இனியும் ஒட்டிக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்த பெருந்தொற்று காலம் வேலை மற்றும் வாழ்க்கையை எவ்வாறு ஒருங்கிணைக்க வேண்டும் என்ற யோசனையை அதிகரிக்க செய்திருக்கிறது” என்று தெரிவித்தார்.