விளிம்புநிலை மக்களின் இன்னல்களை வெளிப்படுத்த வேண்டும்: ஓவியர் செள. செந்தில் நேர்காணல்

ஒரு கலைப்படைப்பின் தாக்கம் சமூகத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் வல்லமை கொண்டது. பெரும்பாலான மக்கள் அழகியலைக் காட்சிப்படுத்தும் கலைஞர்களை கொண்டாடினாலும், சமூகத்தின் இன்னல்களையும் சமூகத்தில் நடக்கும் அநியாயங்களையும் கேள்விக் கேட்கும் கலைஞர்களை குறைத்து மதிப்பிடுகின்றனர்.

உலக அரசியலில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்த கலைஞர்களின் கலைப்படைப்புகள், அவர்கள் வாழ்ந்த காலத்தில் கொண்டாடப்படுவதில்லை. இவ்வாறு சமூக சிந்தனைக்கொண்ட கலைஞர்களை தேடும் பயணத்தில் சென்றபோது, ஓவியர் சௌ செந்திலை சந்தித்தோம்.

அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுடன் பேசியபோது:

” நான் ஓவிய நுண்கலை பட்டப்படிப்பு பயின்றிருக்கிறேன்; ஓவியம் மற்றும் சிற்பக்கலைகளில் பணியாற்றி வருகிறேன். தந்தை ஓவியர் என்பதால் சிறுவயதிலிருந்து ஓவியம் வரைவதில் ஆர்வம் மிக அதிகமாக இருக்கிறது. 

அரசியல் சார்ந்து ஓவியங்கள் வரைவதன் காரணம்:

கல்லூரி காலங்களிலிருந்தே அரசியல் பார்வையில் கலைப்படைப்புகள் உருவாக்கவேண்டும் என்பது என்னுடைய ஆசை; குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த மக்களை பற்றி அல்லது சமூகத்தின் விழும்பு நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கையை பற்றியும், அவர்களுடைய அன்றாட வாழ்வில் வரும் இன்னல்கள் பற்றியும் கலையின் மூலம் வெளிக்கொண்டு வரவேண்டும் என்று எண்ணுகிறேன். அப்படி தவிக்கும் மக்களுக்கு கிடைக்கப்படாத அதிகாரத்தையும் உரிமைகளையும் என்னுடைய வலியாக கருதி என் கலையின் மூலம் காட்சிப்படுத்துகிறேன்.

புத்தர் மற்றும் பெண்ணியம்:

அரசியலை மட்டுமே மையமாக வைக்காமல், அறிவுசார்ந்த கருத்துக்களையும் மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்று நினைக்கிறன். நம் நாட்டில் மதம் சார்ந்து, மொழி சார்ந்து அரசியல் நகர்வதை அனைவரும் அறிந்திருப்பர். அதை மறந்து அறிவுசார்ந்த இயங்கும் ஒரு தலைவனாக புத்தாவை நான் பார்க்கிறேன். அவரின் பல கருத்துக்கள் இன்றைய சமூகத்தின் பல இன்னல்களுக்கு தீர்வை குடுக்கும் என்று நம்புகிறேன்.

எப்படி மதத்தின் அடிப்படையில் ஒரு சமூகத்தையே ஒடுக்கப்பட்டவர்களாக மாற்றுகிறார்களோ, அதே போல பெரும் பாதிப்பில் இருப்பது தான் பெண்ணியம். இதனால், பெண்களின் விடுதலையை மையப்படுத்தும் கலைப்படைப்புகளையும் உருவாக்குகிறேன். சமூகத்தில் பெண்களின் வலியையும், அவர்கள் சந்திக்கின்ற வன்கொடுமைகளையும் என் கலையின் மூலம் மக்களின் முன் பட்டவர்த்தமாக காட்சிப்படுத்த முயற்சிக்கிறேன். ஒரு பெண்ணின் வலியை ஒரு ஆணாக இருந்து உணராமல், அந்த பெண்ணின் இடத்தில் என்னை பொறுத்தி அந்த வலிகளை காட்சிப்படுத்துகிறேன்.

ஏன் கலைப்படைப்புகளை முன்னேற்றம் சார்ந்து உருவாக்கவேண்டும்:

உலகத்தில் பெரும்பாலான கலைஞர்கள், உலகில் உள்ள அழகியலை தன் கலைப்படைப்பின் மூலம் காட்சிப்படுத்த முயற்சிப்பார்கள். பெரும்பாலான மக்களும் அழகியல் இருக்கும் ஓவியங்களை மட்டுமே ரசிப்பார்கள், அதை உருவாக்கும் கலைஞர்களை மட்டுமே பாராட்டுவார்கள். ஆனால், அழகியலுக்காக மட்டுமே கலை என்பது கிடையாது. சமூகத்தில் நடக்கிற, சமூகத்தில் இருக்கிற பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, அதை உள்வாங்கி, நான் உள்வாங்கியதன் வெளிப்பாடாக என்னுடைய ஓவியங்கள் மாறுகிறது என்று நம்புகிறேன். 

கலைப்படைப்புகளுக்கு வந்த எதிர்ப்புகள் மற்றும் பாராட்டுக்கள்:

அரசியல் ரீதியாக உருவாக்கிய கலைப்படைப்புகளுக்கு இதுவரை எதிர்ப்புகள் வந்ததில்லை. என் கருத்தை கேள்விகேட்கும் உரிமை யாருக்கும் கிடையாது. ஒரு கலைஞனின் கலைப்படைப்பிற்கு தடை விதிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்பது என்னுடைய நம்பிக்கை.

ஒடுக்கப்பட்டவர்களின் குரலை முன்னிலைப்படுத்தி சமூகத்திற்கு சொல்வதில் நீளம் பண்பாட்டு மையத்திற்கு பெருமளவு பங்கு இருக்கிறது. அப்படிப்பட்ட அமைப்பின் மூலமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் தலித் சமூகத்தின் வரலாற்றை மக்களின் முன் காட்சிப்படுத்தும் வண்ணம், என்னை போல 22 கலைஞர்கள் கொண்டு ஓவிய கண்காட்சி நடத்தினோம். சமூக விடுதலைக்காக ஒரே சித்தாந்தத்தில் இருப்பவர்களை ஒன்றுகூட்டி இப்படி நிகழ்ச்சி நடத்துவது தான் எங்களுக்கு கிடைக்கின்ற சிறந்த அங்கீகாரம் என கருதுகிறேன்.

மக்களுக்கு கூற வரும் கருத்து:

தலித் சமூகத்திற்கு ஆதரவாக குரல் குடுப்பதற்கு தலித்தாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை, பெண்ணியம் பேசுவதற்கும் பெண்ணாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதனால், மக்கள் இந்த பாகுபாடை மறந்து அனைவரின் விடுதலைக்காக ஒன்றுபட்டு போராடவேண்டும். என்னுடைய பங்களிப்பாக எனது போராட்டத்தை என்னுடைய கலைப்படைப்புகள் மூலமாக வெளிப்படுத்துகிறேன்.

இதுவரை ஏறக்குறைய 200 கலைப்படைப்புகள் உருவாக்கியிருக்கிறேன். மக்களின் முன் என் ஓவியங்களை காட்சிப்படுத்துவதற்கு இனி வரும் காலங்களில் கண்காட்சி மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடத்துவதில் கவனம் செலுத்தவிருக்கிறேன்” என்று கூறுகிறார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.