அருப்புக்கோட்டை அருகே ஆளில்லாத வீட்டில் பீரோவை உடைத்து சுமார் 50 சவரன் தங்கநகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள தோணுகால் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். தொழிலதிபரான இவர், கடந்த திங்கட்கிழமை வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று பாலசுப்பிரமணியன் உறவினர் ஒருவர் பூட்டியிருந்த வீட்டை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக மல்லாங்கிணறு போலீசாருக்கும் பாலசுப்பிரமணியனுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு செய்து மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில் ஆளில்லாத வீட்டை நோட்டம் பார்த்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பின்பக்க கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று அங்கிருந்த இரண்டு பீரோக்களை உடைத்து அதிலிருந்து சுமார் 50 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்ற கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆளில்லாத வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM