புதுடெல்லி,
இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி நாளை இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்திய கேப்டன் ரோகித் சர்மா மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் விளையாடக்கூடிய வீரர். ஒவ்வொரு வீரரும் எல்லா ஆட்டங்களின் அணித்தேர்வுக்கும் தயாராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவர் முழு உடல்தகுதியுடன், புத்துணர்ச்சியுடன் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால் அவர் உள்பட முன்னணி வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியது மிகவும் திருப்தி அளிக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அற்புதமான ஒரு வீரர். வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் வெற்றிகரமான ஒரு வீரர். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தான் நல்ல பார்மில் இருப்பதை காட்டினார்.
அவரது கேப்டன்ஷிப் என்னை வெகுவாக கவர்ந்தது. அத்துடன் நன்றாகவும் செயல்பட்டார். எங்களை பொறுத்தவரை அவர் மீண்டும் பந்து வீச தொடங்கி இருப்பது நேர்மறையான விஷயம். பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் அவரது மிகச்சிறந்த திறமை வெளிப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.
இவ்வாறு டிராவிட் கூறினார்.