பெங்களூரு: கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் (முக்காடு) அணிவதற்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, அம்மாநில அரசு ஹிஜாப் அணிய தடை விதித்தது. இதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் 6 பேர் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கர்நாடக அரசு ஹிஜாப் தடையை வலுப்படுத்தும் வகையில் பி.யூ.கல்லூரி மாணவர்களுக்கு சீருடையை கட்டாயமாக்கி உத்தரவிட்டது. இதையடுத்து உடுப்பி, தக்ஷிண கன்னடா, மங்களூரு, ஷிமோகா உள்ளிட்ட மாவட்டங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தக்ஷிண கன்னடா மாவட்டம் உப்பினங்காடி அரசு முதல் தர பி.யூ கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் 24 பேர் ஹிஜாப் அணிய அனுமதிக்கக் கோரி கடந்த ஒரு வாரமாக வகுப்பை புறக்கணித்து அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிவதற்கு தடை இருப்பதாலும், சீருடை கட்டாயமாக்கப்பட்டு இருப்பதாலும் ஹிஜாபை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.
இருப்பினும் 24 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிராக ஏபிவிபி மாணவ அமைப்பினர் காவி சால்வை அணிந்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இந்நிலையில், ஹிஜாப் தடைக்கு எதிராக போராடிய முஸ்லிம் மாணவிகள் 24 பேரை இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து புத்தூர் பாஜக எம்எல்ஏவும் கல்லூரி மேம்பாட்டு குழு தலைவருமான சஞ்சீவ் மட்டாந்தூர் கூறுகையில், ‘‘கல்லூரி மேம்பாட்டு குழு தீர்மானத்தின்படி கல்லூரி நிர்வாகம் மாணவர்களை இடைநீக்கம் செய்துள்ளது” என்றார்.