ஹைதராபாத்தில் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் அசாதுதீன் ஒவைசியின் மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சி எம்எல்ஏவின் மகன் கைது செய்யப்பட்டு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த வாரம் 17 வயது சிறுமி ஒருவர் தனது தோழியுடன் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள மதுபான விடுதிக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த சில சிறுவர்கள் அந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்த சிறுமி அங்கிருந்து வெளியே செல்ல முயன்றிருக்கிறார். ஆனால், அந்த சிறுமியை பாதி வழியிலேயே மறித்த சிறுவர்கள், கார் மூலமாக அவரை கடத்தி சென்றுள்ளனர். பின்னர் காரில் வைத்தே அந்த சிறுமியை அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்த சிறுமியின் தந்தை கடந்த 4-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பவம் ஊடகங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வைலகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முதல்கட்டமாக ஒரு இளைஞர் மற்றும் 4 சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, இந்த சம்பவத்தில் மஜ்ஸிஸ் முஸ்லிமின் கட்சியின் எம்எல்ஏ ஒருவரின் மகன் ஈடுபட்டிருப்பதாகவும், போலீஸார் அவரை காப்பாற்ற முயற்சிப்பதாகவும் பாஜக எம்எல்ஏ ரகுநந்தன் ராவ் குற்றம்சாட்டினார். ஆனால், இதனை போலீஸார் மறுத்து வந்த நிலையில், சம்பந்தப்பட்ட சிசிடிவி வீடியோவை பாஜக எம்எல்ஏ நேற்று முன்தினம் வெளியிட்டார். அதில், மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சி எம்எல்ஏவின் மகன் அந்தப் பெண்ணை காரில் கடத்தி செல்வது தெரியவந்தது.
இதன் தொடர்ச்சியாக, அந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சி எம்எல்ஏவின் மகனையும் (18 வயதுக்கு கீழ் உள்ளவர்) போலீஸார் கைது செய்து அவரை இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்த்தனர். கைது செய்யப்படடுள்ள 5 சிறுவர்கள் மற்றும் ஒரு இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM