வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 75 கி.மீ நீள சாலையை 105 மணி நேரத்தில் அமைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தொடர்ந்து 105 மணிநேரத்தில் 75 கிலோமீட்டர் சாலையை அமைத்து கின்னஸ் உலக சாதனை படைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, 5 நாட்களுக்குள் மஹாராஷ்டிராவின் அமராவதி முதல் அகோலா நகர் வரையிலான 75 கி.மீ நெடுஞ்சாலை (என்.ஹெச்-53) அமைக்க முடிவு செய்யப்பட்டது. ராஜ் பாத் இன்ப்ராகான் என்னும் தனியார் ஒப்பந்ததாரர் மூலமாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முயற்சி செய்தது. இதற்காக சுமார் 1500 தொழிலாளர்கள் இரவு பகலாக கடுமையாக பணியாற்றினர்.
கடந்த ஜூன் 4ம் தேதி காலை 6 மணிக்கு துவங்கிய சாலை அமைக்கும் பணிகள் நேற்று (ஜூன் 7) நிறைவடைந்தது. அதாவது வெறும் 105 மணிநேரம் 33 நிமிடங்களில் 75 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. இதற்காக கின்னஸ் சாதனைக்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்த என்.ஹெச்-53 நெடுஞ்சாலை இந்தியாவின் கனிம வளங்கள் நிறைந்த பகுதி வழியாக செல்கிறது. மேலும், கோல்கட்டா, ராய்பூர், நாக்பூர், அகோலா, துலே, சூரத் போன்ற முக்கிய நகரங்களையும் இணைக்கிறது.
Advertisement