மத்தியப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜயினியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய நிதின் கட்கரி, “உஜ்ஜயினி நாடாளுமன்ற உறுப்பினரும், பா.ஜ.க தலைவருமான அனில் ஃபிரோசியா (Anil Firojiya) உஜ்ஜயினியின் வளர்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார். அவருக்கு நான் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறேன்.
அதாவது, அவர் தற்போது அதிக உடல் எடையுடன் இருக்கிறார். அவர் தன்னுடைய உடல் எடையைக் குறைக்க வேண்டும். அப்படிக் குறைக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறேன். ஆரம்பத்தில் நான்கூட 135 கிலோ இருந்தேன், இப்போது 93 கிலோ எடை இருக்கிறேன். எனவே, உடல் எடை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவருக்குக் கூறுகிறேன். அவருக்குச் சம்மதமா?” எனக் கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் நிதின் கட்கரி பேசி நான்கு மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், தற்போது பா.ஜ.க எம்.பி அனில் ஃபிரோசியா தன் உடல் உடையைக் குறைத்துக்கொண்டு அமைச்சரிடம் 15,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கக் கோரி கோரிக்கை வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அனில் ஃபிரோசியா, “உலகின் விலை உயர்ந்த எம்.பி நான்தான். எனது தொகுதியின் வளர்ச்சிக்காக நிதின் கட்கரி நான் இழக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் 1,000 கோடி ஒதுக்குவதாக மேடையில் கூறியிருந்தார். எனவே, நான் கிட்டத்தட்ட 15 கிலோ எடையைக் குறைத்திருக்கிறேன். அதனால், உஜ்ஜயினியின் வளர்ச்சிக்காக அதிக நிதியை வழங்குமாறு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் கட்கரியை சந்தித்து கோரிக்கை வைப்பேன். என்னுடைய உடல் எடையை நான் குறைத்ததற்கான ஆதாரங்களுடன் அமைச்சரை சந்திப்பேன். அவர் நிச்சயம் நிதி ஒதுக்குவார் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.