உக்ரைன் தானிய சேமிப்பு கிடங்குகளில் சிக்கியுள்ள 20 டன் தானியங்களை வெளியேற்ற, துருக்கி களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருங்கடல் பகுதியில் மொத்த அதிகாரமும் கொண்ட துருக்கி, உக்ரைன் தானிய விவகாரத்தில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் களமிறங்கியுள்ளது.
உக்ரைனில் இருந்து போஸ்பரஸுக்கு கடற்படை வழித்தடத்தின் வழியாக தானியக் கப்பல்களை அனுமதிக்க கோரிக்கை முன்வைக்கும் என்றே தெரியவந்துள்ளது.
இருப்பினும், சர்வதேச ஒப்பந்தங்களுக்கு அப்பால், உக்ரேனிய தானியங்களை பாதுகாப்பாக வெளியேற்றவும், கப்பல் மற்றும் உரிய பணியாளர் முதல் காப்பீடு வரை பல சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது.
மட்டுமின்றி, உக்ரைன் கடற்பரப்பில் மிதக்கும் கண்ணிவெடிகள் காரணமாக துறைமுகங்களை சரக்கு கப்பல்களால் நெருங்க முடியாத சூழல்.
முதற்கட்டமாக அந்த கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ரஷ்யா முன்வைத்துள்ளது.
மேலும், உக்ரைன் தானியங்களை வெளியேற்ற தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இரு உக்ரைன் துறைமுகங்களை அனுமதிக்க தயார் எனவும் அறிவித்துள்ளது.
ஆனால், உக்ரைனில் தற்போது தேங்கியுள்ள 20 மில்லியன் டன் தானியங்களை வெளியேற்ற மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் 400 எண்ணிக்கை தேவை எனவும்,
ஒரு கப்பலில் 50,000 டன் தானியங்கள் வெளியேற்றினால் மட்டுமே, அடுத்த மாதத்தில் மீண்டும் தானியங்களை நிரப்ப சேமிப்பு கிடங்குகளில் இடம் இருக்கும் எனவும் அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்புக்கு முன்பு வரையில், உக்ரைனின் 90% தானிய ஏற்றுமதியானது கடல் மார்கமே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், போருக்கு முன்னர் ஒவ்வொரு மாதமும் 5 முதல் 6 மில்லியன் டன் தானியங்களை உக்ரைன் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்து வந்துள்ளது.
போரின் முதல் மூன்று மாதங்களில் சாதாரண மாதாந்திர ஏற்றுமதி அளவுகளில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே மாற்று வழிகளில் நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டது,
அதாவது வெறும் 1.2 மில்லியன் டன் தானியங்கள், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் எஞ்சிய வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் கடலில் ரஷ்யாவுக்கு அஞ்சி தற்போது மிதக்கும் கண்ணிவெடிகள் வீசப்பட்டுள்ளதால், சரக்கு கப்பல் நிறுவனங்கள் அச்சம் தெரிவித்துள்ளதுடன், கப்பலுக்கும் ஊழியர்களுக்குமான போதுமான காப்பீடுக்கு வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன.
20 மில்லியன் டன் தானியங்களை உக்ரைனில் இருந்து வெளியேற்றுவது தொடர்பில், பாதுகாப்பு அச்சுறுத்தல் உட்பட பல விடயங்களை உலக நாடுகள் விவாதித்து வந்தாலும்,
100 கப்பல்கள் மற்றும் 20 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 2,000 ஊழியர்கள் தற்போதும் உக்ரைன் துறைமுகத்தில் வெளியேற முடியாமல் போர் தொடங்கிய நாள் முதக் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே 10 வாரங்களில் உலக நாடுகள் பாதுகாப்பான, உரிய தீர்வை கண்டுபிடிக்க வேண்டும் எனவும், வசந்த கால அறுவடைக்கு முன், நாட்டின் தானியக் கிடங்குகள் அனைத்தும் தயார் படுத்தப்பட வேண்டும் எனவும் உக்ரைன் தரப்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.