சிவகங்கை: தமிழ்நாட்டின் 235வது சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து சமத்துவபுர நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் திருவுருவ சிலையையும் திறந்து வைத்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தமிழ்நாட்டில் சாதிய பாகுபாடுகளைக் களைய சமத்துவபுரம் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சமத்துவபுரம் அமைக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்டனர். இந்த திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டின் 235வது சமத்துவபுரம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு அருகே கோட்டை வேங்கைபட்டியில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 1.90 கோடி செலவில் அமைக்கப்பட்டது. இங்க 100 சமத்துவபுர வீடுகள், அங்கன்வாடி மையம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பெரியார் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டது.
இது தமிழ்நாட்டின் 235வது சமத்துவபுரமாகும். இந்த சமத்துவபுரத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சமத்துவபுர நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் திருவுருவ சிலையையும் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர்கள், பெரியகருப்பன், கே.என்.நேரு, ராஜகண்ணப்பன், மூர்த்தி உள்ளிட்டோரும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர். மேலும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும் கலந்துகொண்டார். அதனை தொடர்ந்து கோட்டை வேங்கைபட்டியில் அமைக்கப்பட்ட விழாவில் சமத்துவபுரம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, சமத்துவபுரத்தில் உள்ள விளையாட்டு திடலை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் ஊஞ்சலை ஆட்டிவிட்டு சிறுவர்களை மகிழ்வித்தார். பின்னர் அங்கு அமைந்துள்ள நூலகத்தையும் பார்வையிட்டார்.