Thanjavur Farmers urge Govt to release white paper on sand mining: தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் தே.மு.தி.க, வி.சி.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், மணல் குவாரிகளில் நடைபெற்றுவரும் முறைகேடுகளை விசாரணை குழு அமைத்து ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவையாறு அடுத்துள்ள வடுகக்குடி கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு மணல் சேமிப்பு மற்றும் விற்பனை கிடங்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தே.மு.தி.க.,வைச் சேர்ந்த திருவையாறு ஒன்றியக்குழு உறுப்பினர் தீபா சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் டாக்டர் ப.ராமநாதன், ஒன்றிய செயலாளர் பாலாஜி (எ) பாலசுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நில உரிமை மீட்பு இயக்க மாநில துணைச் செயலாளர் வீரன் வெற்றிவேந்தன், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதுபற்றி அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், திருவையாறு அடுத்துள்ள மருவூர், சாத்தனூர் கிராமங்களில் கொள்ளிட ஆற்றில் அள்ளப்படும் மணல் வடுகக்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மணல் சேமிப்புக் கிடங்கில் பாதுகாக்கப்பட்டு விற்பனை செய்யபடுகிறது.
இந்நிலையில், அரசு மணல் குவாரியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே மணல் அள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை மீறி 24 மணி நேரமும் மணல் கொள்ளை நடைபெறுகிறது. அனுமதிக்கப்பட்ட 80 லோடுகளுக்கு பதிலாக தினமும் ஆயிரக்கணக்கான லோடுகள் மணல் அள்ளப்படுகிறது. இதன் விளைவாக, நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் பாதிக்கப்படுவதோடு, கொள்ளிடம் ஆற்றில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டு 20 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் குற்றஞ்சாட்டினர்.
இதையும் படியுங்கள்: யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன்; பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவு
“ஒரு நாளைக்கு 80 லோடுகள் மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு ஒரு மணி நேரத்துக்கு 134 லோடு மணல் அள்ளப்படுகிறது. இதை ஆதாரப்பூர்வமாக சொல்கிறோம். இதுபற்றி கேட்டால் அரசு அதிகாரிகள் பொய் சொல்கின்றனர். ‘உங்கள் மீது வழக்கு போடுவோம், கைது செய்வோம்’ என எங்களையே மிரட்டுகிறார்கள். மணல் கொள்ளையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு கூட அனுமதி தர மறுக்கின்றனர்,” என்கிறார் தே.மு.தி.க பிரமுகர் சுரேஷ்குமார்.
இந்த முறைகேடுகளை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும். அரசு அனுமதித்த அளவைத் தாண்டி கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளியதை மத்திய சிறப்புக் குழு ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இம் முறைகேடுகளில் தொடர்புடைய அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிம வளம் கொள்ளை போவதை தட்டிக்கேட்கும் சமூக ஆர்வலர்கள் மீது பொய் வழக்கு போட துடிக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்