காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆயிரங்காளியம்மன் கோயில் திருவிழா கடந்த 6 -ம் தேதி இரவு பேழையிலிருந்து அம்பாளை எழுந்தருளச் செய்யும் நிகழ்ச்சியுடன் தொடங்கி சிறப்புடன் நடைபெற்று வருகிறது.
காவிரியின் கிளை நதியான திருமலைராயன் ஆறு கடலோடு கலக்கும் இடமான, திருமலைராயன்பட்டினத்தில் ‘ஆயிரங்காளியம்மன்’ ஆலயம் அமைந்திருக்கிறது.
தஞ்சையை ஆண்ட திருமலைராயன் மன்னன் தலைநகரை இவ்வூருக்கு மாற்றி சிறப்பு செய்தமையால், அந்த மன்னன் பெயரிலேயே ‘திருமலைராயன்பட்டினம்’ என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது. இந்த ஊரில் திரும்பும் திசையெங்கும் கோயில்களும், குளங்களும் இருப்பதைக் காணலாம்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன் வங்காளத்தை ஆண்ட மன்னன் ஒருவன், தனது வேண்டுகோள்களை காளியிடம் வைத்து பல்லாண்டுகள் தவம் செய்தான். அந்த அரசனின் தவத்தை மெச்சிய ஆதிபராசக்தி அவன் முன் தோன்றி,
“மகனே.. உன் தவத்தைக் கைவிடுக. நான் பெட்டி ஒன்றில் எழுந்தருள்வேன். அதனைத் திறந்து என்னை வெளியிலெடுத்து ஒவ்வொரு நாளும் அளவிலாத நைவேத்யம் படைத்து வழிபடு. இவ்வாறு வழிபட்டு வந்தால் உன் வேண்டுதல்கள் நிறைவேறும்” என்று அருள்வாக்கு சொல்லி மறைந்தாளாம்.
அப்போது அந்த அரசன் முன்னே பெட்டி ஒன்று இருந்திடக் கண்டிருக்கிறான். அதனைத் திறந்து அன்னை காளியின் உருவம் கண்டு கசிந்துருகி, அதனை அரண்மனைக்கு கொண்டுச் சென்று மலர்களால் அர்ச்சித்து, தூபதீபம் காட்டியிருக்கிறான். அந்தப் பெட்டியில் பிறவித்துன்பம் தீர்க்கும் திருவடிகளும், வேலனுக்கு வேல் வழங்கிய திருக்கரங்களும், உலகை காக்கும் திருமுகமும் கொண்டு அன்னை காட்சித் தந்திருக்கிறாள்.
அந்த அன்னையை ஆயிரம் மலர்களில், ஆயிரம் மாலைகள், அர்ச்சனை பொருள்கள் எல்லாமே ஆயிரம் என்ற எண்ணிக்கையில் படைத்து நெஞ்சுருகி நெகிந்திருக்கிறான். அவன் மீதான அன்பினால் மகிழ்ந்த அன்னை,
“மகனே…உன் வழிபாடு பூர்த்தியாகிவிட்டது. என் அம்சமாக விளங்கும் இந்த திருவுருவைப் பெட்டியில் வைத்துக் கடலில்விட்டு வீடுபேறு பெறுவாவாக” என்று அன்னை அருளி மறைந்தாள். மன்னனும் அன்னை ஆணைப்படித் திருவுருவை முறையாகப் பெட்டியில் நிலைப்படுத்தி, ஓர் ஒலைக்குறிப்பு ஒன்றையும் வைத்து நன்கு மூடிக் கடலில் விட்டான்.
அந்தப் பெட்டி கடல்வழியே வந்து திருமலைராயன்பட்டினத்தில் கிழக்கே அமைந்த வங்கக் கடலில் மிதந்து கொண்டிருந்தது.
அதனைக்கண்ட பட்டினம் வாழ் மீனவர்கள் பலரும் பெரும் புதையல் கிட்டியுள்ளதாக மனம் மகிழ்ந்தனர். கட்டுமரப் படகுகளில் சென்று வலை வீசியும், அப்பெட்டி எந்த வலைக்கும் அகப்படவில்லை. இந்நிலையில் அவ்வூரில் வாழ்ந்த சிறந்த சிவ தொண்டரான செங்குந்த முதலியார் சமூகத்தின் தலைவர் கனவில் தோன்றிய காளி,
” நான் மூன்று நாள்கள் கடலில் இருந்து விட்டேன். இனி என்னைக் கொண்டுவந்து ஊரினில் நிலைநிறுத்தி என்னை வழிபடும் அனைவருக்கும் நிறைவான வாழ்வினை அளிக்க ஏற்பாடு செய்வாயாக” என்று அருளி மறைந்தார் .திடுக்கிட்டு எழுந்த பெரியவர் விடியும்வரை உறங்கவில்லை. மறுநாள் காலை அடியவர்களை அழைத்துக் கனவில் கண்டதைச் சொல்லி ,அனைவரும் திருக்குளத்தில் மூழ்கி புத்தாடை உடுத்தி, மங்கள வாத்தியங்குடனும், முத்துப்பல்லக்குடனும் அன்னையின் திருப்புகழைப் பாடி கடலோரம் விரைந்தனர். கடலில் அன்னை வீற்றிருந்த பெட்டி மிதந்து கொண்டிருந்தது. அதனைக் கண்டதும் அடியவர்கள் தரை மீது விழுந்து வணங்கினர்.
அப்போது கடலில் மிதந்து வந்த பெட்டி கரையருகே வந்து சிவத்தொண்டர் கைக்கு எட்டியது. அதனைத் தொழுது வேத முழக்கத்துடன் பல்லக்கில் ஏற்றினர். சங்கு முழங்கினர். மத்தளம் கொட்டினர். மலர் மழை பொழிந்தனர். அதனை ஸ்ரீ அபிராமி சமேத ராஜசோழிஸ்வரர் கோயில் அருகே கீழ வீதியில் ஈசானிய பக்கத்தில் உள்ள மடத்தில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கே அன்னையை தரிசிப்பதற்குக் கடலென பக்தர்கள் குவிந்திருந்தனர். அந்த சிவத்தொண்டர் வேதநெறிப்படி பெட்டியிலிருந்து அம்மனை மணிபீடத்தில் எழுந்தருளச் செய்தார். அப்பொழுது பெட்டியிலிருந்த ஓர் ஓலைக் குறிப்பையும் கண்டார்.
” அருள்மிகு ஆயிரங்காளியம்மன் இருளிளை நீக்கி இன்பம் அளிப்பவள்.அன்னைக்குப் படைக்கும் பொருள்கள் யாவும் எண்ணில் ஆயிரம் ஆதல் வேண்டும். ஆண்டுகள் ஐந்திற்கொருமுறை திண்ணமாய்ப் பூசித்து திருவெலாம் பெறுகவே”
என்னும் வாசகம் கண்டு அன்னைக்கு ஆயிரம் ஆயிரமாயிரமாக பலவகை பண்டங்களையும் பழங்களையும் நெய்வேத்தியமாகப் படைத்தார். அன்று முதல் இன்றுவரை ஆயிரங்காளியம்மனுக்கு ஆயிரம் பொருள்களை வைத்து ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா கொண்டாடப்படுகிறது” என்கிறது தலவரலாறு.
அந்த வகையில் இந்தாண்டு திருவிழா கடந்த 6 -ம் தேதி இரவு 10 மணிக்கு மேல் பேழையிலிருந்து காளியம்மனை எழுந்தருளச் செய்யும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மடத்திற்கு அம்மன்பட்டியை திறப்பதற்காக அருளாளர்கள் சென்றார்கள்.. அவர்கள் அனைவரும் ஒரு மண்டல காலம் வரையில் விரதம் பூண்டவர்கள். அவர்கள் பயபக்தியுடன் கர்ப்பக் கிரகத்திற்குள் நுழைந்து பெட்டி இருக்கும் காளியம்மனை எடுத்து வெளியில் உள்ளோர் ஒருவரும் காணாதபடி 7 திரைகளிட்டு மறைத்து விட்டார்கள். அவர்கள் பெட்டிப் பூட்டினைத் திறக்கும்போது கணீரென்று அம்மனின் பாதச் சிலம்பொலி வெளிப்பட அருளாளர்கள் மெய்சிலிர்த்து “தாயே.. தாயே ..”என்று முழங்கினார்கள். அப்பெட்டியைத் திறக்கும்பொழுது வெளியில் அதிர்வேட்டுகள் இடைவிடாமல் முழங்கிக் கொண்டிருந்தன.
பெட்டியின் உள்ளே ஐந்தாண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட எலுமிச்சை பழங்கள்கூட வாடாமல் வதங்காமல் அப்படியே இருந்தன. இதுதான் அன்னையின் அற்புதம். அன்னையை எடுத்துப் பலமணிநேரம் அலங்காரம் செய்து, அலங்காரம் நிறைவு பெற்றதும் 6 திரைகளை அகற்றினார்கள். எஞ்சியிருந்த ஒரே ஒரு திரையை நேற்று செவ்வாய்க்கிழமை காலையில் அகற்ற அம்பாள் தரிசனம் ஆரம்பமானது.
நேற்று மதியம் ஆயிரம் மண் பானைகளில் பெண்கள் பொங்கல் வைத்து, கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். இரவு திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரர் கோயிலிலிருந்து ஆயிரங்காளியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வரிசை எடுத்துச் செல்லும் வரிசை புறப்பாடு நடைபெற்றது. இதில் பட்டாடைகள், அணிகலன்கள், அலங்காரப் பொருள்கள், வாசனை திரவியங்கள், பழங்கள், இனிப்பு வகைகள், மஞ்சள், குங்குமம், திருமாங்கல்யம், உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் எண்ணிக்கையில் எடுத்து வரப்பட்டன. பக்தர்கள் வரிசைப் பொருள்களைத் தாம்பாளங்கள், கூடைகள், பெட்டிகள், அடங்கிய ‘மஞ்சனம்’ எனப்படும் காணிக்கை பொதியை சுமந்து வந்தனர். வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனின் வலிமையை நிரூபிக்க டிராக்டர்கள், மாட்டு வண்டிகள், டாடா ஏசி வாகனங்களில் சீர் வரிசை சாமான்களை ஏற்றி ஊர்வலத்தில் பங்கேற்கச் செய்தனர். இந்த வரிசைப் பொருள்கள் ஊர்வலம் நேற்று மதியம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக நள்ளிரவு 2 மணிக்கு ஆயிரம் காளியம்மன் கோயிலின் முன்மண்டபத்தை அடைந்தது. விழாக் குழுவினரும், தன்னார்வலர்களும் பக்தர்களின் காணிக்கைப் பொருள்களை மண்டபம், விழாப்பந்தல் முழுவதும் அம்மனின் தரிசனத்துக்காக வைத்தனர். இன்று (8.6.2022)அதிகாலை இந்த சீர் வரிசைபொருள்களை ஆயிரங்காளியம்மன் முன்பு படையலிட்டனர். தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக,அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இன்று முதல் வரும் வெள்ளிகிழமை வரை 48 மணி நேரத்திற்கு (2 நாள்கள் மட்டும்) பக்தர்களுக்கு ஆயிரம் காளியம்மன் தரிசனம் தரும் வைபவம் நிகழும். இந்த விழாவுக்காகப் பள்ளி,கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தால் இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் என இரண்டு வரிசைகள் பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், காவல் துறை சார்பில் பக்தர்கள் வசதிக்கான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றங்களைத் தடுக்க, பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்ய கண்காணிப்பு காமிராக்களுடன் காவல் கட்டுப்பாட்டு அறையும் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக மற்றும் தீயணைப்பு துறையினர், மீட்புக்குழுவினர், நவீன உபகரணங்கள் கொண்ட ஆம்புலன்ஸுடன் மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர். 2022-ம் ஆண்டுக்குப் பிறகு, இனி ஆயிரம் காளியம்மனின் அற்புத தரிசனம் வருகிற 2027 ம் ஆண்டு தான் நடைபெறும் என்பது குறிப்பித்தக்கது.