சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த 7 கிலோ தங்கத்தை தங்களிடம் தரக்கோரி ஐந்து இலங்கை வாசிகள், சொந்த நாட்டிற்கான விமானத்தில் ஏறமாமல் கடந்த 6 நாள்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது, விமானக் கழிவறை மற்றும் முனைய கழிவறைகளில் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்கத்தை யார் வேண்டுமானாலும் உரிமை கோரலாம். ஆனால், அதற்கு உரிய ஆவணங்கள் இருந்தால், சுங்க வரி செலுத்தி தங்கத்தை பெற்றுக் கொள்ளலாம் என கூறுகின்றனர்.
ஐந்து இலங்கை வாசிகளில் ஒருவரான ஷாஹுல் ஹமத்ன் இஹ்சாஹுல் ஹக் (24) கூறியதாவது, நானும் எனது 4 நண்பர்கள் அமீருல் அசார் முகமது சஹர் (35), நஜாத் ஹபிபீபுத் தம்பி (35), நஜ்முதீன் முகமது சுகி (32) , அனீஸ் அஜ்மல் (32) ஆகியோர், இலங்கையில் உள்ள நகைவியாபாரிடம் வேலை செய்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக துபாயில் இருந்து தங்களுடைய முதலாளிக்கு “சட்டப்பூர்வமாக” தங்கத்தை எடுத்துசெல்கிறோம். நாங்கள் ஒவ்வொருவரும் 1.399 கிலோ தங்கத்தை வைத்திருந்தோம். ஏனெனில், மொத்தமாக 1.4 கிலோ தங்கம் வைத்திருந்தால், இலங்கையில் அதிக வரி வசூலிக்கப்படும்.
இலங்கைக்கு நேரடியாக செல்லும் விமானத்தில் டிக்கெட் இல்லாததால், சென்னை வழியாக இணைப்பு விமானத்தில் முன்பதிவு செய்தோம்.
நாங்கள் வந்த விமானம் சென்னை தரையிறங்கியதும் சுங்கத்துறை அதிகாரிகள் எங்களை தடுத்து நிறுத்தினர். எங்கள் குரூப் இல்லாத மற்றொரு இலங்கை பயணியையும் தடுத்து நிறுத்திய சுங்கத் துறையினர், அந்நபரிடமிருந்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம், விமானக் கழிவறை மற்றும் முனைய கழிவறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.4.21 கோடி மதிப்புள்ள மொத்தம் 9.02 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துவிட்டனர்.
எங்களிடம் வந்து, ஜூன் 3-ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு இணைப்பு விமானம் புறப்படுவதற்குள் தங்கம் திருப்பித் தரப்படும் என்று உறுதியளித்துவிட்டு, எங்கள் செல்போன்களை வாங்கிவிட்டு சென்றுவிட்டனர். பின்னர், விமானம் புறப்படும் சமயத்தில், செல்போனை மட்டும் தான் திருப்பி கொடுத்தனர். நாங்கள் தங்கத்தை தரக்கோரினோம். ஆனால், அதிகாரிகள் நாட்டைவிட்டு கிளம்பும்படி மிரட்டினார்கள்.
தற்போது, நாங்கள் கிளம்பிவிட்டால் மீண்டும் நகையை கைப்பற்ற இந்தியா வருவதற்கு நிச்சயம் விசா தரமாட்டார்கள் என குற்றச்சாட்டுகின்றனர்.
இலங்கை வாசிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாகிர் ஹுசைன் கூறியதாவது, இங்குள்ள சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, இணைப்பு விமான பயணிகளிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்ய உரிமை இல்லை.தங்கம் குறித்த அதிகாரப்பூர்வ படிவத்தை துபாய் சுங்கத்துறையிடம் பயணிகள் அளித்துள்ளனர். இருப்பினும், சென்னை விமான நிலையை சுங்கத் துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர் என தெரிவித்தார்.