புதுடெல்லி: புனேயைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் 25.56 கி.மீ. நீளத்திற்கு தார் சாலையை 78 மணி நேரத்தில் போட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தேசிய நெடுஞ்சாலையில் (என்ஹெச்-53) இந்த சாதனையை இந்நிறுவனம் புரிந்துள்ளது.
கத்தார் நாட்டில் தோஹா எனுமிடத்தில் 25.27 கி.மீ. தூர தார் சாலை போட்டதே இதுவரை உலக சாதனையாக இருந்தது. அதை தற்போது இந்திய நிறுவனம் முறியடித்துள்ளது. ராஜ்பாத் இன்பிராகான் என்ற நிறுவனம் 800 பணியாளர்கள் மற்றும் 700 தொழிலாளர்கள் உதவியோடு இந்த சாதனையை புரிந்துள்ளது. அமராவதி மற்றும் அகோலா இடையே இந்த சாலை போடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் இந்தப் பகுதியில் 70 கி.மீ. தூரத்துக்கு விரிவாக்கம் செய்யும் பணியை இந்நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. பணிகளை மேற்பார்வையிடும் வேலை எம்எஸ்வி இன்டர்நேஷனல் இன்கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி ஜூன் 3-ம் தேதி தொடங்கப்பட்டு இடைவெளியின்றி தொடர்ந்து நடைபெற்றது.
நிறுவனத்தின் செயலை மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி வெகுவாகப் பாராட்டியுள்ளார். சாலை போடும் பணி முழுவதையும் கின்னஸ் உலக சாதனை குழுவினர் முழுவதுமாக வீடியோ ஆதாரமாக பதிவு செய்தனர். இதன் மூலம் இந்தியா பெருமைப்படும் வகையில் நிறுவனம் செயல்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.