அடுத்தடுத்து எழும் புகார்கள்.. கந்துவட்டி வாங்குவோருக்கு காவல்துறை கடும் எச்சரிக்கை

கந்துவட்டி வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் நாகஜோதி புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
கந்துவட்டி கொடுமை காரணமாக கடந்த 2017ஆம் ஆண்டு நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு 2 குழந்தைகளுடன் பெற்றோர்கள் தீக்குளித்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதனையடுத்து கந்துவட்டி வசூலிக்கும் நபர்களை காவல்துறையினர் கண்டறிந்து கைது செய்து வந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் கந்துவட்டி கொடுமை தலைதூக்கி உள்ளது. சமீபத்தில் கடலூரில் கந்துவட்டி கொடுமை காரணமாக ஆயுதப்படை காவலர் செல்வகுமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ரூ.5 லட்சம் வாங்கிய காவலரிடம் வட்டி சேர்த்து 12 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
image
கந்துவட்டி கொடுமைகளை தடுக்க ஆப்ரேஷன் கந்துவட்டி என்ற சிறப்பு இயக்கத்தை தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவால் துவங்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள கந்துவட்டி புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, கந்துவட்டி வாங்குவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்.பி-களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் நாகஜோதி புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில், ‘ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி, ஆன்லைன் லோன் செயலி மூலம் பெறும் வட்டி என அனைத்துமே கந்துவட்டிக்குள் அடங்கும். சென்னை மத்திய குற்றப்பிரிவில் உதவி ஆணையர் தலைமையில் கந்துவட்டி தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது.
image
அரசு நிர்ணயித்த வட்டி விகிதத்தை விட அதிகளவில் கந்துவட்டியில் ஈடுபட்டதாக இதுவரை 50 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். இதில், முக்கிய குற்றவாளிகள் பலரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளோம். ஆன்லைன் லோன் செயலியில் பொதுமக்கள் அதிகமான வட்டியை செலுத்த முடியாத நிலை ஏற்படுவதால், புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக அவர்களது உறவினர்களுக்கு அனுப்புகின்றனர். அது தொடர்பாக விசாரித்து வருகிறோம்.
கந்துவட்டி தொடர்பான புகார்களை பொதுமக்கள் காவல் உதவி செயலி மூலமாகவும், ஆன்லைன் லோப் ஆப் கந்துவட்டி புகார்களை 1930 என்ற எண்ணிற்கும், 100, ஆன்லைன் மூலமாகவும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். கந்து வட்டி வசூலிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அவர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.