Annamalai says HRCE Dept need not to Tamilnadu: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லை, அதிகாரிகள் தான் பிரச்சனை செய்கிறார்கள் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகக் கோவில்களை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து, விலக்க வேண்டும் என பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றன.
கடந்த 2 நாட்களாக சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகப் பணிகளை ஆய்வு செய்ய சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு, தீட்சிதர்கள் ஒத்துழைக்க மறுத்தனர். சிதம்பரம் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு செய்ய கூடாது என இந்து அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை தமிழகத்திற்கு தேவையான என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இந்த விஷயத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கோயில்கள், தேவாலயங்கள், மசூதிக்கள் போன்றவை அரசின் கட்டுப்பாட்டில் இருக்க கூடாது என்பது பா.ஜ.க.,வின் நிலைப்பாடு. ஆனால், இந்து கோவில்களுக்கு மட்டும் இந்து சமய அறநிலையத்துறையை அமைத்துள்ளார்கள். இந்துசமய அறநிலையத்துறையின் செயல்பாடு, பாதி நேரம் எல்லா கோவில்களுக்கும் சென்று சண்டையிடுவது தான். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில்களில் பிரச்சனை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தான் பிரச்சனை செய்கிறார்கள். சாமானிய பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையால் எந்த நன்மையும் இல்லை.
இதையும் படியுங்கள்: ஆட்சியர் பெயரில் ஆன்லைன் மோசடி ஆசாமிகள்… திருச்சி தில்லாலங்கடி!
இந்து கோவில்களின் உண்டியலில் வரும் வருமானத்தை வைத்து, தமிழக அரசையே நடத்தலாம். இந்து சமய அறநிலையத்துறையை கலைத்துவிட்டு, அந்தந்தப் பகுதியில் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய குழு மூலம் கோயில் நிர்வாகத்தை நடத்திக் கொள்ளலாம். இது தான் பா.ஜ.க.,வின் நீண்ட நாள் நிலைப்பாடு.” என அண்ணாமலை பதிலளித்தார்.