சென்னை: அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்து உள்ளார்.
தமிழக கல்வித்துறையின் நடவடிக்கைகள் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ள நிலையில், தற்போது எல்கேஜி வகுப்புகள் விசயத் தில் மாறி மாறி பேசி மக்களை குழப்பி வருகிறது. எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் நிறுத்தப்படுவதாக அறிவித்த நிலையில், இன்று தொடர்ந்து செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்து உள்ளார். இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய அமைச்சரை நீக்கிவிட்டு, அனுபவமுள்ள ஒருவரை அமைச்சராக நியமியுங்கள் என சமூக வலைதளங் களில் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் 2,381 அங்கன்வாடி மையங்களை அரசு பள்ளிகளுடன் இணைத்து கடந்த 2019-20ஆம் கல்வியாண்டு முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் சேரும் குழந்தைகளுக்கு பாடம் நடத்த தொடக்கக்கல்வி இயக்ககம் சார்பில் ஆசிரியர்களும் பணிக்கு நியமிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என திமுக அரசு அறிவித்தது. இது பொது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக தமிழகஅரசு செயல்படுகிறது என்று கல்வியாளர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் கடுமையாக திமுக அரசு மீது விமர்சனம் வைக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று, எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நிறுத்தப்படவில்லை. அரசு பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இருந்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். மேலும், அருகில் எங்கு அங்கன்வாடி மையம் உள்ளதோ அங்கு குழந்தைகளை சேர்த்துக்கொள்ளலாம். இதில் பணியாற்றிய ஆசிரியர்கள் ஏற்கனவே இருந்தபடி 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை முழுமையாக ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
பள்ளி கல்வித்துறைக்கு லாயக்கற்ற அமைச்சர் அன்பில் மகேணின் தகவல்கள், தகிடுத்தத்தமான பேச்சு மீண்டும் விமர்சனங்களை ஏற்படுத்தி யது.
இந்த நிலையில், அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்து உள்ளார். எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவைக்கேற்ப நியமிக்கப்படுவர் என்றும் தெரிவித்து உள்ளார். மேலும், பல்வேறு தரப்பு கோரிக்கையினை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைக்கிணங்க வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அன்பில்மகேஷ் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி ஏற்றபிறகு, இதுவரை இல்லாத அளவுக்கு, கல்வித்துறையில் மாற்றம் என்ற பெயரில் பல குழப்பங்களை விளைவித்து வருகிறார். முறையான, தெளிவான அறிவிப்புகளை வெளியாடமல் குழப்பமான அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருவது ஆசிரியர்களிடையே ஏற்கனவே அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. மேலும், பள்ளி ஆண்டிறுதி தேர்வு முடிவடைந்ததும், விடுமுறை முடிந்து, பள்ளி திறப்பு தேதிகளை அறிவிப்பதிலும் குழப்பம் நீடித்தது. இது பெற்றோர்க ளிடையேயும், ஆசிரியர்களிடையேயும் கடுமையான விவாதப்பொருளாக மாறியது.
இதைத்தொடர்ந்து தற்போது எல்கேஜி யுகேஜி வகுப்புகள் விஷயத்திலும் தமிழக மக்களையும், ஆசிரியர்களையும் அமைச்சர் அன்பில் மகேஷ் குழப்பி வருகிறார். ஒருநாள் மூடப்படும் என்கிறார், அடுத்த நாள் அங்கன்வாடியுடன் இணைக்கப்படும் என்கிறார், மறுநாள், எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்கள், பள்ளிகளில் தேவையான இடங்களுக்கு பயன்படுத்தப்படுவார்கள் என்கிறார், இன்றோ, எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவித்து உள்ளார்.
பள்ளிக்கல்வித் துறைக்கு தகுதியான நபரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், ஆசிரியர் களும் சமூக ஊடங்களில் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தி வருகின்றனர்.