தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில் முறைகேடாக அரசு பட்டா போடப்படுவதாக எழுந்தப் புகாரினைத் தொடர்ந்து வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர், தாமரைக்குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலங்களுக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டது தெரியவந்தது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரில் அதிமுக ஒன்றியச் செயலாளராக இருந்த அன்னப்பிரகாஷ் மற்றும் அவருடைய உறவினர்களின் பெயர்களுக்கு முறைகேடாக பட்டா போடப்பட்டுள்ளது. வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் அன்னப்பிரகாஷ் அபகரித்திருந்த நிலத்தில் கனிமவளத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அரசு மதிப்பு சுமார் ரூ.4 கோடியே 13 லட்சம் எனக் கணக்கிடப்பட்டது. இத்தகையைச் சூழலில் ஒ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஒ.ராஜா நடத்தி வரும் தனியார் பள்ளிக்கு அரசு நிலத்திலிருந்து மண் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் எழுந்திருப்பது தேனி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களிலிருந்து அனுமதியின்றி மண்ணை வெட்டி எடுத்ததன் மூலமாக அரசுக்கு வருவாய் இழப்பு மற்றும் பொதுமக்களுக்கு சுகாதாரகேடு விளைவிக்கும் வகையில் புஸ்பம் புளு மெட்டல் நிறுவனம் செயல்பட்டுள்ளதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கலெக்டர் முரளீதரன் இப்புகார்கள் மீது தாலுகா அளவிலான கண்காணிப்புக் குழு ஆய்வு செய்து, கலெக்டர் தலைமையிலான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் மேல் நடவடிக்கைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், தாலுகா அளவிலான கண்காணிப்பு குழு அலுவலர்கள், புகார் மனுதாரருடன் தணிக்கை மேற்கொண்டு, ஆய்வுக் கூட்டம் நடத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரங்களை கலெக்டர் தலைமையில் நடக்க உள்ள கூட்டத்திற்கு முன்பாக புகைப்படங்களுடன் அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை மோசடியாக பட்டா மாறுதல் செய்த வழக்கில் ஒபிஎஸ் உதவியாளர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் ஓ.பி.எஸ் தம்பி ராஜா தப்புவாரா, சிக்குவாரா என்பது கண்காணிப்புக் குழு விசாரணைக்கு பிறகே தெரிய வரும்.