Trichy Collector Sivarasu alerts online money fraud on his name: திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு (S.Sivarasu) பெயரில் மாவட்ட ஆட்சித்தலைவர் புகைப்படத்துடன் பொதுமக்களையும், அரசு அலுவலர்களையும் ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்குடன் 6378370419 என்கிற எண் கொண்ட வாட்ஸ்அப் மூலம் வங்கி கணக்கிலும், அமேசான் போன்ற வாட்ஸ் அப் செயலிகளின் மூலம் ஆன்லைன் வாயிலாக கிஃப்ட் கார்டு உள்ளிட்டவற்றிற்கு பணம் செலுத்திடக் கேட்டும் செய்திகளை அனுப்பி பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது.
இதனையடுத்து ஆட்சியர் சார்பில் காவல்துறையில் இந்த குற்றச்செயலில் ஈடுபடுபவர் மீது புகார் அளித்து, கடும் நடவடிக்கை எடுத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் மேற்கண்ட செல்பேசி எண் உள்ளிட்ட போலியாக உருவாக்கப்படும் வெவ்வேறு செல்போன் எண்கள் வாயிலாக பணம் கேட்பவர்களை முற்றிலும் புறக்கணித்து, உடனடியாக காவல்துறையில் புகார் தெரிவித்திடுமாறு ஆட்சியர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது போன்ற குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
இதேபோல் தான் திருச்சி சிறைத்துறை அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு துவங்கப்பட்டு அதன் மூலமும் பணமோசடி நடந்து வந்ததாக அறிந்ததன் அடிப்படையில் அந்த போலி முகநூல் கணக்கு முடக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: வேளாண் விளை பொருளுக்கு சந்தை வரி விதித்த தி.மு.க அரசு: ஓ.பி.எஸ் காட்டம்
திருச்சி மத்திய சிறை அலுவலக சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் திருமுருகன். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டது. இந்த முகநூல் கணக்கை தொடங்கிய மர்மநபர் திருமுருகனின் நண்பரிடம் பணம் கேட்டு வந்தார்.
இதுபற்றி அறிந்த சூப்பிரண்டு திருமுருகன் தனது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார், சிறை அதிகாரி பெயரில் தொடங்கப்பட்ட போலி முகநூல் கணக்கை முடக்கி உள்ளனர். மேலும், அந்த போலி முகநூல் கணக்கை டெல்லியிலிருந்து ஒருவர் தொடங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த நபர் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
க.சண்முகவடிவேல்