மதுரை ஆதீனத்தின் 292வது மடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமி உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதனையடுத்து புதிய ஆதீனமாக ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் வந்தபிறகு சர்ச்சைகளும், சச்சரவுகளும் அதிகரித்து வருகிறது.
நாள்தோறும் அரசியல் தொடர்பான கருத்துகளை கூறி வருகிறார். மேலும் மதம் தொடர்பான கருத்துகளையும் கூறி வருவதால் அவருக்கு எதிர்ப்பு கிளம்புகிறது. அந்த வகையில், மதுரையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற்ற துறவியர் மாநாட்டு பொதுக்கூட்டத்தில் மதுரை ஆதீனம் பேசினார். அப்போது, நடிகர் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் விநாயக கடவுளை கேலியாக பேசியதாகவும் இதனால் நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை யாரும் பார்க்க கூடாது, என பேசியிருந்தார்.
நடிகர் விஜய் கிறிதவ மதத்தைய பின்பற்றுபவர் என்பதை மனத்தில் வைத்துக்கொண்டு அவர் இவ்வாறு பேசியதாக அப்போதே எதிர்ப்பு கிளம்பியது. அதன் தொடர்ச்சியாக தற்போது விஜய் ரசிகர்களும் மதுரை ஆதீனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆதீனத்தின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாநகர் பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
அதில், எச்சரிக்கை! மதுரை ஆதீனம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா?”; “வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்து. எங்களுக்கு ஜாதி மதம் ஏதுமில்லை. தளபதி மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை, என்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
மதுரை ஆதீனம் சமீப காலமாக பேசி வரும் கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பிவரும் சூழலில், தற்போது நடிகர் விஜய் குறித்து தெரிவித்த கருத்தும் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.
newstm.in