இந்தியாவிடமிருந்து கிடைக்கவுள்ள யூரியா உரங்கள்

இந்திய அரசாங்கத்திடமிருந்து சிடைக்க உள்ள 65,000 மெற்றிக் டொன் யூரியா உரம் அடுத்த மாதம் முதல் இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக விவசாய, வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

விவசாய அமைச்சின் கீழ் வெளிநாட்டு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் விவசாயத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (08) இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த உரம் இந்திய அரசாங்கத்தினால் அவர்களின் தேவைக்காக ஓமானில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. தற்போது நமது நாட்டில் விவசாயிகள் முகங்கொடுக்கும் உரத் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்த யூரியா உரங்களை அவர்கள் இலங்கைக்கு வழங்க தீர்மானித்துள்ளனர்.

மேலும், இந்த உரங்கள் கிடைத்தவுடன், தேசிய உர செயலகம், கொமர்ஷல் உர நிறுவனம், இலங்கை உர நிறுவனம் மற்றும் பிற வலையமைப்பு மையங்கள் ஊடாக இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் விவசாயிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இவ்வாறு கிடைக்கவுள்ள யூரியா உர மூட்டை ஒன்று ரூ.10,000க்கு விவசாயிகளிடம் கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விவசாயிகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டது. இந்த விலைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போதும் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

எவ்வாறாயினும், நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு இந்த உரங்களை விநியேகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் அம்பாறை போன்ற சில பிரதேசங்களில் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருவதால் அவர்களுக்கு இந்த யூரியா உரம் கிடைப்பதில் பயன் இல்லை. தற்போது பயிர்ச்செய்கை செய்யப்பட்டு நல்ல விளைச்சலைக் கொண்ட நெற்பயிர்களுக்கு யூரியா உரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விளைச்சலை அதிகரிக்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.