வங்க தேசத்தின் இந்து-பௌத்த-கிறிஸ்தவ ஒற்றுமை பேரவையின் இணைப் பொதுச் செயலாளர் மொனீந்திர குமார் நாத் இந்திய ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “வங்க தேசத்தில் கடந்த ஆண்டு துர்கா பூஜை விழாவின்போது பிராமன்பரியா, கொமிலா பகுதிகளில் வகுப்புவாதக் கலவரங்கள் வெடித்தன. துர்கா பூஜை பந்தல்கள்மீது சில கும்பல்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆனால், வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா அரசு அந்த சவாலைத் திறம்படக் கையாண்டது. தற்போது, வங்க தேசத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்களின் எண்ணிக்கை கடந்த 12 ஆண்டுகளில் 15,000-லிருந்து 30,000-மாக, கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளன. ஏனெனில் அரசு சமூக உறுப்பினர்களுக்கு நாடு முழுவதும் துர்கா பூஜை கொண்டாட்டங்களை நடத்த அனுமதி அளிக்கிறது.
இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாங்கள் வரவேற்கவில்லை. அத்தகைய சட்டங்கள் எங்களுக்கு உதவாது. மற்ற நாட்டினரைப் போலவே சிறுபான்மையினரான எங்களுக்கு சில பிரச்னைகள் உள்ளன. சிறுபான்மை இந்து சமூகத்தை அச்சுறுத்தும் சம்பவங்கள் ஆங்காங்கே அவ்வப்போது பதிவானாலும், ஷேக் ஹசீனா அரசு சிறுபான்மையினருக்கான சிக்கல்களைச் சிறப்பாக, முனைப்புடன் கையாள்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
எனவே, இங்கிருந்து புலம்பெயர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இங்கேயே இருப்போம். யாரும் தாய்நாட்டை விட்டு அண்டை நாட்டில் தஞ்சமடைய விரும்பவில்லை. மிகவும் துரதிஷ்டவசமான சூழ்நிலைகளில் மட்டுமே மக்கள் தங்கள் தாயகமான வேர்களை விட்டு வெளியேறுகிறார்கள், அத்தகைய சூழ்நிலைகளில் அவர்களின் எதிர்காலத்திற்கு எந்த உறுதியும் இல்லை. எனவே, வங்க தேசத்துக்குள் எங்கள் சமூகத்தை ஒருங்கிணைத்து அணிதிரட்டுவதன் மூலம் எங்களுக்கு என்ன சவால்கள் வந்தாலும் சமாளிப்போம். சிறுபான்மை விவகார அமைச்சகம் மற்றும் சிறுபான்மை மத சமூகங்களுக்காக ஒரு சிறப்பு நிரந்தர ஆணையத்தை உருவாக்குவதே எங்களின் உண்மையான நோக்கம்” என்றார்.