புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 7,240 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைவிட இந்த எண்ணிக்கை 40% அதிகம்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கரோனா தொற்று நிலவரம் குறித்த அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,240 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதத்திற்குப் பின்னர் இன்றைய பாதிப்பு முதன்முறையாக அதிகரித்துள்ளது.
அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 1.31 சதவீதமாகவும், வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 2.13 சதவீதமாகவும் உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனாவால் 8 பேர் இறந்தனர். இதனால் மொத்த இறப்பு 5,24,723 ஆக உள்ளது. கரோனா தொற்று ஆரம்பித்ததில் இருந்து இந்தியாவில் 4.31 கோடி பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2701 பேருக்கு தொற்று உறுதியானது. இது கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகம். அதேபோல் டெல்லியில் 564 பேருக்கு தொற்று உறுதியானது. மே 15க்குப் பின்னர் டெல்லியில் 500க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 195 கோடிக்கும் அதிகமான டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.