இந்தியாவில் முதல்முறையாக… தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும் இளம்பெண்!

ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் இன்புற்றிருப்பதே இயற்கை வகுத்துள்ள நியதி. இந்த நியதிக்கு மாறாக ஆணும், ஆணும் திருமணம் செய்து கொள்வது, பெண்ணும், பெண்ணும் மணம் புரிந்து கொள்ளும் போக்கு உலக அளவில் அவ்வபோது நிகழ்ந்து வருகிறது.

இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று ஒரு ஆண் தன்னைதானே திருமணம் செய்து கொள்ளும் கொடுமையும் தற்போது நிகழ்ந்து வருகின்றன. ஆண்கள் மட்டும்தான் இப்படி செய்வாங்க? ஏன் நாங்க இப்படி செய்யக்கூடாதா என்று தங்களைதாங்களே திருமணம் செய்துகொள்ள பெண்களும் கிளம்பி உள்ளனர்.

2020 ஆம் ஆண்டு பட்ரிசியா கிறிஸ்டின் என்ற பெண்ணும், பிரேசிலியன் மாடலான கிரிஸ் கேலராவும் தன்னைத் தானே திருமணம் செய்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் வரிசையில் தற்போது இணைய உள்ளார் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் கஷமா பிந்து.

இந்திய அளவில் முதல் பெண்ணாக, வரும் 11 ஆம் தேதி (ஜூன் 11) தன்னை தானே திருமணம் செய்து கொள்ள பிந்துவின் திருமண சடங்குகள், வதோதரா மாவட்டம், கோட்ரி பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று (ஜுன் 8) நடைபெற்றது.

குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் என 25க்கும் குறைவானவர்கள் பங்கேற்ற இந்த எளிய வைபவத்தில், குஜராத் பாரம்பரிய உடை, அணிகலன்கள் ஜொலிக்க, மருதானி ஓவியங்களால் அலங்கலரிக்கப்பட்ட கைகளுடன் மணப்பெண் கோலத்தில் சிக்கென்று காட்சி அளித்தார் பிந்து.

‘எனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை. அதேசமயம் என்னை மணமகளாக பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது. இந்த ஆசையை நிறைவேற்றி கொள்ள சுய திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன்.

இந்தியாவில் இதுபோன்று யாரேனும் இருக்கிறார்களா என தேடிப் பார்த்தேன். அப்படி யாரும் இல்லை என்று தெரிந்ததும், எனது வித்தியாசமாக இந்த முடிவை பெற்றோரிடம் தெரிவி்த்தேன். அவர்கள் எனது விருப்பத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். இதோ இப்போது மணமகளாக நின்கிறேன்’ என்று கூறும் பிந்து, திருமணத்தை முதலில் கோயிலில் வைத்து கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும், பிறகு தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் வீட்டிலேயே தமது திருமணத்தை நடத்த முடிவு செய்ததாக கூறுகிறார்.

மற்ற பெண்களைப் போல, திருமணம் முடிந்ததும் மணமகன் வீட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்று குறும்பு புன்னகையுடன் கூறுகிறார் கஷமா பிந்து.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.