இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியில், இலங்கை மக்களின் போராட்டத்தின் உச்சகட்ட விளைவாக கடந்த மாதம் 9-ம் தேதி மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்குமாறு நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்தும் யாரும் முன்வரவில்லை. பின்னர், இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரேயொரு எம்.பி-யை மட்டுமே கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்றார். இந்த நிலையில், இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும், இலங்கையின் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சே தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
இலங்கையின் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ராஜினாமா செய்த பசில் ராஜபக்சே, “இன்று முதல் அரசின் எந்த எந்த நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடமாட்டேன். அதேசமயம் அரசியலிலிருந்து என்னால் விலகவும் முடியாது” என செய்தியாளர்களிடத்தில் கூறினார். மேலும், பதவி விலகிய பசில் ராஜபக்சே அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.