ராமேசுவரம்: கரோனா காலத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்கள் கற்றலில் ஏற்பட்டுள்ள இடைவெளியை சீர்படுத்த ‘எண்ணும் எழுத்தும்’ எனும் திட்டத்தை நடப்பு கல்வியாண்டில் கல்வித்துறை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி மாணவர்கள் பல்வேறு சிக்கலைச் சந்தித்தனர். ஆன்லைன் மூலமாகவே அதிக நாள்கள் கல்வி பயிலவேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே போதிய அளவில் எழுத படிக்க பயிற்சி கிடைக்காத மாணவர்கள் நலன் கருதி தமிழகத்தில் 2025-ஆம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து பள்ளி மாணவா்களும் அடிப்படை கணிதத் திறனுடன், பிழையின்றி எழுதுவதையும், படிப்பதையும் உறுதிசெய்யும் விதமாக ‘எண்ணும், எழுத்தும்’ என்ற திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டம் நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1, 2, 3 வகுப்புகளுக்கு நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
இந்த திட்டத்திற்கு மாநில அளவிலான பயிற்சி நடைபெற்று முடிந்துள்ளதை தொடர்ந்து மாவட்ட மற்றும் வட்டார அளவிலான பயிற்சிகள் தற்போது ஜூன் 6ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை 5 நாட்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதற்காக அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியா்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு இதற்கான கையேடு, பாடப்புத்தகம் வடிவமைப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் தயார் நிலையில் உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி ஆகிய 3 கல்வி மாவட்டங்களுக்குட்பட்ட 11 வட்டாரங்களைச் சேர்ந்த தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் 1,2,3 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2000 ஆசிரியர்களும், 250 கருத்தாளர்களும் கலந்துகொள்கின்றனர்.
ராமேசுவரம் அருகே மண்டபம் முகாமில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி முகாமில் மாவட்ட கல்வி அலுவலர் பாலமுத்து தலைமையில் ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி முகாம் நடைபெற்று வருகின்றது.
இந்த முகாமில் கரோனா காலத்தில் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்கள் கற்றலில் ஏற்பட்டுள்ள இடைவெளியை சீர்படுத்தும் வகையில் .மாணவர்களின் கற்றல் திறனுக்கேற்ப, ‘அரும்பு – மொட்டு – மலர்’ என்ற பெயரில், கற்றல் வகைப்படுத்தி துணைக்கருவிகளுடன் திறன் மேம்படும் வகையில் ஆசிரியர்களுக்கு கருத்தாளர்கள் பொம்மலாட்டம், கோலாட்டம், நடித்தல், கதை கூறுதல் பேசுதல், விளையாடுதல், பாடுதல், வரைதல் ஆகிய செயல்பாடுகள் மூலம் பயிற்சி அளித்து வருகின்றனர்.