புதுடெல்லி: ‘கரோனா காரணமாக உலகளவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக உலகளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்தியா வலுவான பொருளாதார அடித்தளங்களைக் கொண்டிருப்பதால் இந்த சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு பயணிக்கிறது’ என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டுக்குப் பிறகு பொருளாதாரக் கொள்கையில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் காரணமாகவே இந்தியா பொருளாதார ரீதியாக எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளக் கூடியதாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய நிதித் துறை மற்றும் செபி இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘இந்தியாவின் பொருளாதாரப் பயணம்@75’ நிகழ்வில் நேற்று நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசினார். பொருளாதார ரீதியாக கடந்த ஏழு ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட முன்னெடுப்புகளையும், அவை பொருளாதார சவால்களை எதிர்கொள்ள எவ்வாறு உதவியது என்பது குறித்தும் அவர் அந்நிகழ்வில் சுட்டிக்காட்டினார்.
‘‘15 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவது இயல்பானது. ஒவ்வொரு அரசும் இந்த சவால்களை எதிர்கொண்டு நாட்டை முன்னகர்த்திச் செல்ல வேண்டும். 1991-ல் இந்தியா பொருளாதார ரீதியாக பெரும் சவால்களை எதிர்கொண்டது. அப்போதைய அரசு அந்தச் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டது. அதேபோல் 2013-14-ல் இந்தியா மிகப்பெரிய பொருளாதார சவால்களை எதிர்கொண்டது.
மோடி தலைமையிலான அரசு வெற்றிகரமாக அந்தச் சவால்களை எதிர்கொண்டு பொருளாதார சரிவிலிருந்து நாட்டை மீட்டெடுத்தது. இந்தச் சூழலில் எதிர்பாராத விதமாக கரோனா வந்தது. அது உலக அளவில் பொருளாதார ரீதியாக தீவிர நெருக்கடிகளை உருவாக்கியது. அதையெடுத்து ரஷ்யா – உக்ரைன் போர் உலகின் பொருளாதாரச் சூழலை மேலும் நெருக்கடிக்குத் தள்ளியது. எனினும், இந்தியா அந்த நெருக்கடிகள் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக பயணித்துவருகிறது.
வங்கித் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், நிறுவன வரி குறைப்பு, டிஜிட்டல்மயமாக்கம், ஜிஎஸ்டி அறிமுகம், திவால் சட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளே இதற்கு அடிப்படைக் காரணம். இந்தியாவின் தாக்குப்பிடிக்கும் திறனைக் கண்டு உலகநாடுகள் வியந்தன.
நாடு முழுவதும் 80 கோடி ஏழைகளுக்கு ஒவ்வொரு மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம், கரோனாவால் நெருக்கடிக்கு உள்ளான சிறு, குறு நிறுவனங்களை மீட்டெடுக்க ரூ.4.5 லட்சம் கோடி கடன் உதவி வழங்கும் திட்டம், ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கும் ஆரோக்கிய யோஜனா திட்டம் ஆகியவை உலகளவில் கவனம் ஈர்த்தன’’ என்று அவர் தெரிவித்தார்.