மேலூர் அருகே உடல்நலக்குறைவால் உயிரிழந்த கோயில் காளைக்கு ஆட்டம் பாட்டத்துடன் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வஞ்சிநகரம் கிராமத்தில் உள்ள கருப்பணசாமி கோயில் பட்டத்து காளை பல்வேறு ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றிவாகை சூடி கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
குறிப்பாக கண்டுபட்டி, சிராவயல், அரளிபாறை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிகட்டு போட்டிகளில் வெற்றிவாகை சூடி கட்டில், பீரோ, மின்விசிறி, அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது.
இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கருப்பணசாமி பட்டத்து காளை உயிரிழந்தது. இதனையடுத்து துக்கத்தில் இருந்த கிராம மக்கள் சீரும் சிறப்பாக காளையை அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.
இதையடுத்து ஊர் மந்தையில் அலங்கரித்து வைக்கப்பட்ட காளையின் உடலுக்கு கிராம மக்கள் மாலை, வேஷ்டி, துண்டு அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் ட்ரம்செட், தாரைதப்பட்டை முழங்கச கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக காளையை சுமந்து சென்று அங்குள்ள கோவில் வளாகத்தில் அடக்கம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர். தங்கள் வீட்டில் ஒருவர் இறந்தது போல் கிராமம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM