நவீன வகை ஆண்ட்ராய்டு போன்களில் இலவசமாக ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளில் ஆன்லைன் பப்ஜி கேம், ஆன்லைன் ரம்மி விளையாட்டு, பிஃரிப்பயர் கேம் உள்ளிட்ட விளையாட்டுகள் சமீபகாலமாக பிரபலமாகி வருகின்றன. இன்றைய இளைஞர்கள் பலர், அந்த ஆன்லைன் கேம்களை எந்நேரமும் விளையாடி வருகின்றனர். இதனால், அவர்களில் பலர் மனரீதியான பிரச்னைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், அத்தகைய ஆன்லைன் கேம் விளையாடிய இளைஞர் ஒருவர், தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கரூர் அருகே உள்ள தான்தோன்றிமலை சிவசக்தி நகர் பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்த சஞ்சய் (வயது 23) என்ற இளைஞர், நேற்று மாலை தாயின் புடவையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து தான்தோன்றிமலை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து இளைஞரின் உடலை கைப்பற்றி கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
போலீஸாரின் தொடர் விசாரணையில் உயிரிழந்த சஞ்சயின் செல்போனை கைப்பற்றி பார்த்தபோது, பல தகவல்கள்கிடைத்ததாக சொல்லப்படுகிறது. தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சஞ்சய் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், ‘கேம்முக்கு யாரும் அடிக்ட் ஆகாதாதீங்க. என்ன மாதிரி ஏமாறாதீங்க. எதாவது சாதிங்க’ எனவும், ‘ஃபிரீ பயர் விளையாட்டில், முகம் தெரியாதவரிடம் ஒரு லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளேன். இந்த செயலியை தடை செய்தால் தான் என்னைப் போன்று யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள்’ எனவும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
“ஆன்லைன் விளையாட்டு மோசடிகள் மற்றும் மன அழுத்தத்தால் பள்ளி சிறுவர்கள் கல்லூரி மாணவர்கள் பலர் இப்படி உயிரை மாய்த்துக்கொள்வது வேதனை. இதனை தடுக்க, அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு செல்போன் வாங்கி தருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவர்களை அடிக்கடி கண்காணிக்க வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.