சென்னை: ஒமைக்ரான் உருமாற்றங்கள் வேகமாக பரவும் தன்மையுடையது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று எம்.ஜி.எம் மருத்துமனையில் முதியவர்கள் மத்தியில் அதிகம் காணப்படும் தவறி கீழே விழுவதினால் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்தும், கீழே விழுவதை தவிர்க்கும் வகையிலான விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரோனா தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுமைக்கும் 6000-ஐ கடந்த நிலையில், மகாராஷ்டிராவில் மட்டுமே கடந்த 24 மணி நேரத்தில் 3000 என்ற எண்ணிக்கையிலும், கேரளாவில் 1000-ஐ கடந்து மூன்று மாதங்களாக கூடிக்கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டுமே நேற்று 95 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 22 இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு தொற்று இருந்தது. அவர்களையும், அவர்கள் தொடர்புடையவர்களையும் தீவிரமாக கண்கானித்துக் கொண்டிருக்கிறோம்.
கல்வி நிறுவனங்களில் குறிப்பாக ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், சக்திசாய் பல்கலைக்கழகம் மற்றும் ராஜிவ் காந்தி இன்ஸ்டியூட் போன்ற நிறுவனங்களில் தொற்று கூடுதலாகி தற்போது ஐஐடி மற்றும் சக்தி சாய் பல்கலைக்கழகத்தில் தொற்று இல்லாத நிலையை அடைந்துள்ளது. அண்ணா பல்கலைகழகத்தில் மட்டும் 23 நபர்களுக்கு மட்டும் தொற்று இருந்த நிலையில் அவர்களில் பெரும்பாலோனோருக்கு தொற்று குறைந்துள்ளது. ராஜிவ் காந்தி இன்ஸ்டியூட்டில் 29 அண்டை மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களும் இன்று பாதுகாப்பாக இருக்கிறார்கள், அச்சம் கொள்ள தேவையில்லை.
தொற்றின் வேகம் என்பது கூடுதலாக இருந்து கொண்டிருக்கிறது, அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் முன்னேச்சரிக்கையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் முகக்கவசம் அணிய வேண்டியது இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்ட பிறகு தற்போது முகக்கவசம் அவசியம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை முகக்கவசம் அணியவேண்டியது இல்லை என்ற அறிவிப்பை நாம் வெளியிடவில்லை. ஏனென்றால் பேரிடர் முடிகிறவரை நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். பொது நிகழ்ச்சிகளில் கூட முகக்கவசம் அணிய வேண்டியது என்பதை கட்டாயமாக்கிக் கொண்டிருக்கிறோம்.
தடுப்பூசியை பொறுத்தவரை தமிழ்நாட்டில் 42,87,346 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போட வேண்டியுள்ளது, 2-வது தவனை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்கள் 2 கோடி பேர் இருந்த நிலையில் தற்போது 1 கோடியே 20 லட்சமாக குறைந்துள்ளது. மொத்தமாக 1 கோடியே 64 இலட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடவேண்டியுள்ளது. ஜூன் 12ம் தேதி மீண்டும் ஒரு லட்சம் இடங்களில் தமிழ்நாடு முழுவதிலும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது.
அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும், மாவட்ட சுகாதார அலுவலர்களும் மிக சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே முதல் தவணை தடுப்பூசி பள்ளி மாணவர்களுக்கு செலுத்திய நிலையில், இரண்டாம் தவணை தடுப்பூசி பள்ளிகள் திறந்தவுடன் செலுத்தப்படும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை போன்ற மாவட்டங்கள் தடுப்பூசி செலுத்துவதில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது, விடுபட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பி.எ 4 மற்றும் பி.எ 5 போன்ற உருமாற்ற வைரஸ் பாதிப்பு நமக்கு வரத்தொடங்கியிருக்கிறது. 150 மாதிரிகளில் 4 நபர்களுக்கு பி.எ.4ம், 8 நபர்களுக்கு பி.எ.5ம் என மொத்தம் 12 நபர்களுக்கு இருந்தது. மேலும் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது, அதன் விவரம் பின்னர் தெரியவரும். ஒமைக்ரானை பொறுத்தவரையில் 7 வகையிலான உருமாற்றங்கள் உள்ளது. ஆனால் அது பெரிய வகையில் உயிர் பாதிப்பை ஏற்படுத்துவதாக இல்லை என்றாலும், அது வேகமாக பரவும் தன்மையுடையது என்பதால் நாம் கூடுதல் கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகளை விதித்து, செயலாற்றிக்கொண்டிருக்கிறோம்.
முன்னெச்சரிக்கையாக தனிமனித இடைவெளி கடைபிடிப்பது, முகக்கவசம் அனிவது, தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதை கடந்தவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் போடப்படுகிறது. மெகா தடுப்பூசி முகாம்களிலும் போடப்படும். 18 வயது முதல் 59 வயது வரை உள்ள நபர்களுக்கு தனியார் மருத்துவமனையின் மூலம் மட்டுமே 388 ரூபாய்க்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, அதையும் அரசு மருத்துவமனைகளில் போட ஒன்றிய அரசை கேட்டுக்கொண்டிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.