புதுடெல்லி: கடந்த 8 ஆண்டுகளில் நாட்டில் உயிரி தொழில்நுட்ப துறை தொடர்பான பொருளாதாரத்தில் 8 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உயிரி தொழில்நுட்ப தொழில் கண்காட்சி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு 2 நாள் கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர், விழாவில் அவர் பேசியதாவது: கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் சில நூறு என்ற எண்ணிக்கையில் இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, தற்போது 70 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தொழில் செய்வதை எளிதாக்குவதற்கும், தொழில் முனைவோர் கலாசாரத்தை மேம்படுத்துவதற்கும் ஒன்றிய அரசு கடுமையாக உழைத்துள்ளது. இந்த 70 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 60 வெவ்வேறு தொழில்களை மேற்கொண்டுள்ளன. சில துறைகளில் ஏற்றுமதி சாதனை புரிந்துள்ளது. ஒவ்வொரு துறைக்கும் ஆதரவு தருவதும், மேம்படுத்துவதும் நாட்டின் தேவையாகும். நாட்டின் வளர்ச்சிக்கான வேகத்தை அதிகரிப்பதற்கான அனைத்து வழிகளையும் அரசு ஆராய்ந்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு உத்வேகத்தை தருவதில் உயிரி தொழில்நுட்ப துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் உயிரி பொருளாதாரம் 8 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் திறன், கண்டுபிடிப்புகளின் மீதான உலகளாவிய நம்பிக்கை புதிய உச்சத்தில் உள்ளது. நாட்டின் பயோடெக் துறையும் இதேபோன்ற நம்பிக்கையை ஈர்ப்பதாக இருக்கிறது. 2014ம் ஆண்டில் 6 ஆக இருந்த உயிரி தொழில்நுட்ப ஆய்வு மையங்களின் எண்ணிக்கை தற்போது 75 ஆக உள்ளது. பயோடக் தயாரிப்புக்கள் 10ல் இருந்து 700 ஆக அதிகரித்துள்ளது. உயிரி தொழில்நுட்ப தொழில் கண்காட்சியானது துறையில் ஆத்மநிர்பார் பாரத் இயக்கத்தை வலுப்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.5 முக்கிய காரணங்கள்மோடி மேலும் பேசுகையில், ‘உயிரி தொழில்நுட்பத்தின் தொழில் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள நாடாக இந்தியாவை வெளிநாடுகள் கருதுவதற்கு 5 மிகப் பெரிய காரணங்கள் உள்ளன. பல தரப்பட்ட மக்கள் தொகை, மாறுபட்ட தட்ப வெப்ப மண்டலம், திறமை வாய்ந்த மனித மூலதனம், தொழில் புரிவதை எளிமையாக்குவதற்கான முயற்சிகள், உயிரி தயாரிப்புகளுக்கான தேவை அதிகரிப்பு ஆகியவைதான் அவை,’ என்றார்.