கடன் வாங்கி படமெடுத்த கமல்ஹாசன்
தமிழ் சினிமாவில் கடன் வாங்காமல் பணம் எடுக்கும் தயாரிப்பாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி கடனே வாங்காமல் தங்களது சொந்த பணத்தை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் மிக மிகக் குறைவு.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் கூட 'விக்ரம்' படத்தை கடன் வாங்கித்தான் எடுத்துள்ளார். அப்படத்தின் உதவி இயக்குனர்களுக்கு மோட்டார் பைக் வழங்கிய நிகழ்வில் பைனான்சியரான மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன் உடனிருந்தார். 'விக்ரம்' பட நிகழ்வில் அவர் ஏன் இருக்கிறார் என ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டனர்.
அவரிடம்தான் படத்திற்காக கமல்ஹாசன் கடன் வாங்கினாராம். படத்தை மொத்தமாக உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்துவிட்டு நல்ல லாபத்தைப் பார்த்துள்ளார் கமல்ஹாசன். அதனால், படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே வாங்கிய கடனையும் அடைத்துவிட்டார். கமல்ஹாசன் முதல் முறையாக கையெழுத்திட்டு கடன் வாங்கியது இப்போதுதானாம். அவருடைய தயாரிப்பு நிறுவனத்திற்காக இதுவரை கையெழுத்திட்டு கடன் வாங்கியது அவருடைய மறைந்த சகோதரர் சந்திரஹாசன். அவரது மறைவுக்குப் பின் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தை கமல்ஹாசன்தான் தற்போது நிர்வகித்து வருகிறார்.
தொடர்ந்து மற்ற முன்னணி நடிகர்களை வைத்தும் படங்களைத் தயாரிக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளாராம். விஜய் உள்ளிட்ட சிலரிடம் அது பற்றி பேச்சு வார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.