குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை நாளாந்தம் 100 வீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. நேற்று (8) மாத்திரம் சுமார் 2,500 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியூமி பண்டார அறிவித்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முன்னர் ஒரு நாளைக்கு 1,200 கடவுச்சீட்டுகளை மாத்திரம் வழங்கியது. தற்போது கடந்த இரண்டு வாரங்களாக நாளொன்றுக்கு சுமார் 2,500 கடவுச்சீட்டுகளை வழங்கி வருகின்றது. இருந்தபோதிலும் ஒரு நாளைக்கு சுமார் 1,000 பேர் திருப்பி அனுப்ப படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் குறித்த திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக வருகின்றமையே இந்த நிலைக்குக் காரணம். இதனால் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் மக்கள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வரவேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் காலை 6.15 க்கு ஆரம்பித்து இரவு 10.00 மணி வரை கடவுச்சீட்டுகளை விநியோகித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.