Tamilnadu News Update : தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு மத்தியி அரசு, ஒழுங்குமுறை சட்ட மசோதாவை இறுதி செய்ததை தொடர்ந்து, கடைகள், சினிமா அரங்குகள், வணிக வளாகங்கள் 24 மணி நேரமும் செயல்பட வழி வகுத்தது. ஆனாலும் இந்த மசோதவை பின்பற்றியோ அல்லது தங்களது மாநிலத்தின் நிலைக்கு ஏற்ப மாற்றம் செய்தோ நடைமுறைப்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியிருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முதல் கட்டமாக மதுரை மாவட்டத்தில் 24 மணி நேரமும் கடைகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் 24 மணி நேரமும் திறந்து வைக்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசானை வெளியிட்டது.
ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், இந்த அரசாணை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த அரசாணையை மீண்டும் அமல்படுத்தியுள்ள தமிழக அரசு, தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் திறந்து வைக்க அனுமதி அளித்துள்ளது.
மேலும் ஊழியர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட் வேண்டும் என்றும், கூடுதல் நேரம் உட்பட அனைத்து ஊதியமும் ஊழியரின் சேமிப்பு கணக்கில் செலுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ள தமிழக அரசு, நாள் ஒன்றுக்கு 10.30 மணி நேரம் உட்பட வாரத்திற்கு 57 மணி நேரத்திற்கு மேல் ஊழியர்களை வேலை செய்ய அனுமதிக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பெண்களின் அனுமதி பெற்றே அவர்களை இரவுப்பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு போக்குவரத்து செலவு வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 10 நபர்களுக்கு மேல் பணிபுரியக்கூடிய கடைகளை முழு நேரமும் திறக்கலாம் எனவும் உத்தரவு அமலுக்கு வந்ததில் இருந்து 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.