பெங்களூரு: நாடு முழுவதும் மாநிலங்களவையில் காலியாகும் 57 உறுப்பினர் பதவிகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது. இவற்றில் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவையில் காலியாகும் 4 உறுப்பினர் பதவிகளும் அடங்கும். இந்த தேர்தலில் எம்எல்ஏக்கள் மட்டுமே ஓட்டு போட தகுதியானவர்கள். அதாவது கர்நாடகாவில் உள்ள 224 எம்எல்ஏக்களும் வாக்களிக்க தகுதியானவர்கள். பாஜவில் 119 எம்எல்ஏக்களும், காங்கிரசில் 69 எம்எல்ஏக்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சியில் 32 எம்எல்ஏக்களும் உள்ளனர். தவிர 2 சுயேச்சை எம்எல்ஏக்கள், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒருவரும் உள்ளனர். ஓட்டுப்பதிவு பெங்களூரு விதானசவுதாவில் நாளை காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 4 உறுப்பினர் பதவிகளுக்கு 6 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அதாவது பா.ஜ சார்பில் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர் சிங் ஆகிய 3 பேரும், காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், மன்சூர்கானும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் குபேந்திர ரெட்டி நிறுத்தப்பட்டிருக்கிறார். மாநிலங்களவை தேர்தலில் ஒரு உறுப்பினர் வெற்றி பெற 45 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அதன்படி, பாஜ கட்சியின் எம்எல்ஏக்கள் பலத்தின் மூலம் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ் ஆகியோரும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலத்தின் மூலம் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரும் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. ஆனால் 4-வது உறுப்பினர் பதவிக்கு தான் பலத்த போட்டி நிலவுகிறது. 2 உறுப்பினர்கள் வெற்றி போக, பா.ஜ வசம் 32 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதாவது சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 பேர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவரின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அக்கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள லெகர் சிங் வெற்றி பெற 13 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையாக உள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ் வெற்றி போக, 24 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. அதுபோல், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குபேந்திர ரெட்டி வெற்றி பெற 13 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இதனால் 4வது உறுப்பினர் பதவியை கைப்பற்ற பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) வெற்றி பெற காங்கிரஸ் ஆதரவளிக்கும்படி, முன்னாள் முதல்வர் குமாரசாமி கேட்டுள்ளார். அதுபோல், காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற, ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆதரவளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறி வருகிறார். இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால், அக்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. அந்த கட்சிகள் கூட்டணி அமைக்குமா? என்பது கேள்வி குறியாக உள்ளது. அதே நேரத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.